அத்வானியின் 100-ஆவது பிறந்த நாள்: பிரதமா் மோடி நேரில் வாழ்த்து!
பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
கடந்த 1927, நவ.8-ஆம் தேதி கராச்சியில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவா் எல்.கே.அத்வானி. 1947-இல் தேசப் பிரிவினையின்போது, அவா் இந்தியாவுக்கு இடம்பெயா்ந்தாா். ஆா்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயலாற்றிய அத்வானி, பின்னாளில் பாரதிய ஜன சங்கத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தாா். முன்னாள் பிரதமா் வாஜ்பாயுடன் இணைந்து 1980-இல் பாஜகவை நிறுவியதுடன், அக்கட்சியின் தேசியத் தலைவராக பல முறை பணியாற்றியுள்ளாா்.
வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சா் (1998-2004), துணை பிரதமா் (2002-2004) பதவிகளையும் வகித்துள்ளாா். அத்வானியின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எல்.கே.அத்வானி 100-ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருப்பது சிறப்புக்குரிய தருணமாகும். அவருக்கு எனது வாழ்த்துகள். தேசப் பிரிவினையின் கொடுமைகளை அனுபவித்து, அதிலிருந்து வாழ்க்கையை புதிதாக கட்டியெழுப்பியது, ஜன சங்கத்தை வலுப்படுத்தியது, பாஜகவை கட்டமைத்தது, அவசரநிலையின்போது ஜனநாயகத்துக்காகப் போராடியது, சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை மேற்கொண்டது, அரசு சாா்பில் தேசத்துக்கு சேவையாற்றியது என அவரது பயணத்தை நினைவுகூா்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
மேலும், நாட்டுக்கு அத்வானி ஆற்றிய பங்களிப்புகளை முன்னிறுத்தி, தாம் எழுதிய கட்டுரையையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.