19 இந்திய மாலுமிகள் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்! - மத்திய அரசு தகவல்!
19 இந்திய மாலுமிகள் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது...
ஐக்கிய அரபு அமீரகம் அருகே 19 இந்திய மாலுமிகள் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
லைபீரியா நாட்டின் கொடியிடப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலான எம்டி டொமினிகா ப்ராஸ்பெட்டின், கடந்த நவ. 11 ஆம் தேதி அமீரகத்தின் கடல்பகுதி அருகே 19 இந்தியர்கள் உள்பட 22 மாலுமிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மினா சக்ர் கடல்பகுதியின் அருகே சென்றபோது அந்தக் கப்பலின் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இன்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பலில் இருந்த 19 இந்தியர்களும் நல்வாய்ப்பாகக் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த நவ.10 ஆம் தேதி துபை நோக்கிச் சென்ற மற்றொரு லைபீரியக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 4 இந்தியர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.