டெலிவரி ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சி! ராகுல்
டெலிவரி ஊழியர்களின் உரிமைகளை பற்றி ராகுல் காந்தி பேச்சு..
டெலிவரி ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
தெலங்கானா டெலிவரி ஊழியர்களுக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய ராகுல் காந்தி,
Advertisement
Advertisement
நாட்டில் இரண்டு முரண்பட்ட சித்தாந்தங்கள் இருப்பதாகவும், ஒன்று பாஜக-ஆர்எஸ்எஸ் தரப்பிலும், மற்றொன்று காங்கிரஸ் தரப்பிலும் உள்ளது.
பாஜக-ஆர்எஸ்எஸ் உங்களைக் கொத்தடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள். 24 மணி நேரமும் கடினமாக உழைக்க வேண்டும், காயமடைந்தாலோ, விபத்துகளில் உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களுக்குக் கவலை இல்லை.
ஆனால், அதன் பலன்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களுக்கோ, அம்பானி-அதானி போன்றவர்களுக்கோ அல்லது ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கோ கிடைக்க வேண்டும். ஆனால், உங்கள் கடின உழைப்பிற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று அவர்கள் உங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.
இதற்கு மாறாக, காங்கிரஸின் அணுகுமுறையை விளக்கிய ராகுல், டெலிவரி ஊழியர்களும், உழைப்பாளர்களும் நாட்டின் அடித்தளம், அவர்களைப் பங்குதாரராக மாற்றி, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் காங்கிரஸ் விரும்புகிறது.
கிக் ஊழியர்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் நிற்பதாகவும், அவர்களுக்குக் காப்பீடு வழங்குதல், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊதியம், ஓய்வுக்கான பிரத்யே இடங்களை அமைத்துத் தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தெலங்கானா அரசு, ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களில் டெலிவரி பணியாளர்கள் பணி நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக, வைஃபை வசதி கொண்ட பிரத்யேக ஓய்வு மண்டலங்களை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று, ராகுல் காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்க்கா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கௌட் ஆகியோருடன் இணைந்து, ஷில்பராமம் முதல் ஜெயபேரி மைதானம் வரை 'டெலிவரி' பணியாளர்கள் நடத்திய இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்றார்.