அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 90 பில்லியன் டாலரை எட்டி வரலாற்றுச் சாதனை: பியூஷ் கோயல்
அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி குறித்து...
புதுதில்லி: உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற 45 ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர் பியூஷ் கோயல், நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் (அக்டோபர் வரை) நாட்டின் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 570 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், அக்டோபர் மாதத்தின் ஏற்றுமதி மதிப்பில், சரக்கு ஏற்றுமதி 50 பில்லியன் டாலராகவும், சேவை ஏற்றுமதி 40 பில்லியன் டாலராக உள்ளது. நாட்டின் ஏற்றுமதி செயல்பாடு குறித்து நம்பிக்கை தெரிவித்த கோயல், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை வெற்றிகரமாக எட்டுவோம் என்று கூறினார்.
Advertisement
Advertisement
தற்போதைய மோதல்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு நாட்டின் சர்வதேச வர்த்தகம் 15 முதல் 16 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் இந்தச் செயல்பாடு, நாட்டின் பொருளாதாரத்தின் மீள்தன்மையையும், ஏற்றுமதியாளர்களின் நம்பிக்கையையும், உலகளாவிய சவால்களை உறுதியுடனும் சுயமரியாதையுடனும் எதிர்கொள்ளும் திறனையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார வலிமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சமீபத்திய பண்டிகைக் காலத்தில், குறிப்பாக தீபாவளியின் போது, வணிக நடவடிக்கைகள் மிகவும் வலுவாக இருந்தன. நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் நுகர்வோர் தேவை அதிகரித்திருந்ததையும், வணிக நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளதாகவும், நவம்பர் மாதத்திலும் சாதனை அளவிலான வசூல் இருக்கும் என்றும், இது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகத்துடன் நடைபெறுவதைக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் நீண்டகால பொருளாதார இலக்குகள் குறித்துப் பேசிய கோயல், தற்போது நான்கு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2047-ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் தொழில் துறை, உற்பத்தித் துறை ஆகியவற்றின் சேவைகளை விளக்கும் வகையில், 38-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி குறித்து பேசிய அமைச்சர், பல்வேறு மாநிலங்கள், வணிக நிறுவனங்கள், தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் பன்முகத் திறன்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு முக்கியமான தளமாக இந்தக் கண்காட்சி உருவெடுத்துள்ளது.
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தளத்தை சர்வதேச இடங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், குறிப்பிட்ட துறைகள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கிய பல வெளிநாட்டு வர்த்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். இந்த முயற்சிகள், இந்திய உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குத் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும், வளர்ந்த பொருளாதாரங்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள வாங்குபவர்கள் மற்றும் சந்தைகளுடன் தொடர்புகொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும். இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் 45-வது பதிப்பு, வெறும் மேம்பாடுகளைத் தாண்டி, 'வளர்ந்த இந்தியா 2047' என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்துள்ளது என்று கோயல் குறிப்பிட்டார்.
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'இந்தியா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி' வெள்ளிக்கிழமை புது தில்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற கருத்தாக்கத்துடன் நடைபெறுகிறது. 14 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கின்றன. அவை தங்கள் பிராந்திய தயாரிப்புகள், உள்ளூர் தொழில்துறைகள், பாரம்பரிய கைவினைப் பொருள்கள், கலாசார பாரம்பரியம், சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை இதில் காட்சிப்படுத்துகின்றன.
இந்தக் கண்காட்சியானது வணிகங்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பங்கேற்கும் மாநிலங்களுக்குத் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய மேடையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.