உத்தரகண்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 8 பேர் பலி!
உத்தரகண்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது பற்றி...
உத்தரகண்ட் மாநிலத்தில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர். மேலும், 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில், குலார் அருகே பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்ட நிலையில், பியாசி மற்றும் தல்வாலா ஆகிய இடங்களில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கின.
இந்த விபத்தில் 8 பேர் பலியானதாக டெஹ்ரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த 26 பயணிகள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “உத்தரகண்டின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். துயரமான இந்த வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.