உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 320 இடங்களைக் கைப்பற்றும்! - முதல்வர் ஆதித்யநாத் உறுதி!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 320-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி...
உத்தரப் பிரதேசத்தில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 320-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வரும் 2027 ஆம் ஆண்டு 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி தங்களது இலக்கான 320-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் எனவும், பாஜகவின் 10 ஆண்டு ஆட்சி நிறைவடையும் முன்னர் 10.5 லட்சம் அரசுப் பணியாளர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“யாரேனும் ஒரு பெண்ணிடமோ, இளைஞரிடமோ, வியாபாரியிடமோ அல்லது ஏழையிடமோ கேளுங்கள், அவர்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றே சொல்வார்கள். வளர்ச்சியை விரும்பாதவர்களும், ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்மறையைக் காண்பவர்களும், குழப்பமான சூழலை விரும்புபவர்களும், ஏமாற்றமடைவார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 2.30 லட்சம் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நேரத்தில் 6,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் திறன்கொண்ட காவல் துறை பயிற்சி வசதியானது 60,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் புனிதத் தன்மையை உறுதி செய்ய, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம், மரணமடைந்தவர்கள், குடியுரிமைப் பெறாதவர்கள் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் தோல்விகளுக்கு அரசியலமைப்பின் நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறது. அவர்கள் வெற்றி பெற்றால் அது அவர்களின் வெற்றி, ஆனால், தோல்வி அடைந்தால் அதற்கு வாக்குப் பதிவு இயந்திரம், எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவைதான் காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.