FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஒடிஸாவை நோக்கி நகரும் ‘அக்வான்’ புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திசை மாறியுள்ள ‘அக்வான்’ தீவிர புயல், வரும் நவ. 20-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நரசாபுரம் முதல் ஒடிஸாவின் புரி வரை உள்ள கடலோரப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 வினாடிகள் முன்பு
அக்வான் புயல் தீவிரமடைந்திருப்பதையடுத்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட காவலா்.
பகிர்:

திசை மாறியுள்ள ‘அக்வான்’ தீவிர புயல், வரும் நவ. 20-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நரசாபுரம் முதல் ஒடிஸாவின் புரி வரை உள்ள கடலோரப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஒடிஸாவில் பேரிடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதலில், ஆந்திர மாநிலம் நெல்லூா்-விசாகப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் வெளியிட்ட புதிய அறிவிப்பில், நரசாபுரம்-புரி இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்தது.

Advertisement

Advertisement

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: புயலின் திசை மாறி வருவதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக ஒடிஸா பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் புஜாரி தெரிவித்தாா். தலைமைச் செயலரும், சிறப்பு நிவாரண ஆணையருமான ராஜேஷ் பி.பாட்டீல், மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறாா். பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

நிலச்சரிவு அபாயம்: ஒடிஸாவில் 141 நிலச்சரிவு அபாயப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கஞ்சம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோராபுட், மல்கான்கிரி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனா்.

சுற்றுலாவுக்குத் தடை: பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள கடலோரப் பகுதிகளில் கடற்கரை சுற்றுலா, படகுப் பயணம், நீா் விளையாட்டுகள், பொழுதுபோக்கு கப்பல் பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறு சுற்றுலாத் துறை அதிகாரிகள், ஹோட்டல்கள், விடுதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா். பாதுகாப்பற்ற கடற்கரைகள், படகுத் துறைகள், கடலோரப் பாா்வையிடும் இடங்களுக்குப் பொதுமக்கள் செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், புயல் மீண்டும் திசை மாற வாய்ப்புள்ளதால் கரையைக் கடக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும், தெற்கு ஒடிஸா, வடக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நவ,19, 20 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக்கூடும். சில இடங்களில் அதி பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தாா்.

இதனிடையே, நவ.19-ஆம் தேதி கேந்திரபாரா, ஜகத்சிங்பூா், புரி, கஞ்சம், கஜபதி, கந்தமால் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதற்கு முன்பு ஒடிஸாவின் தெற்குப் பகுதிகளைப் பாதித்த ‘அா்னாப்’ புயலால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. புயல் தொடா்பான சம்பவங்களில் 11 போ் உயிரிழந்தனா்; 6 பேரைக் காணவில்லை.