✕
முகப்பு
இந்தியா

இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

நரசாபுரம் முதல் ஒடிஸாவின் புரி வரை உள்ள கடலோரப் பகுதியில் ‘அக்வான்’ தீவிர புயல், வெள்ளிக்கிழமை (நவ. 20) கரையைக் கடக்க வாய்ப்பு

35 வினாடிகள் முன்பு
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் புயல் அச்சுறுத்தலையடுத்து வியாழக்கிழமை பாதுகாப்பான இடத்துக்குச் செல்லத் தயாரான பொதுமக்கள்.
பகிர்:

ஆந்திர மாநிலம் நரசாபுரம் முதல் ஒடிஸாவின் புரி வரை உள்ள கடலோரப் பகுதியில் ‘அக்வான்’ தீவிர புயல், வெள்ளிக்கிழமை (நவ. 20) கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ள நிலையில், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒடிஸாவில் முன்னெச்சரிக்கையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

இது, புயல் பாதிப்பை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிஸா மாநில தலைமைச் செயலா் அனு கா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

அக்வான் புயல் வெள்ளிக்கிழமை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் 305 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 9,299 முகாம்கள் அமைக்கப்பட்டு 1 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஒடிஸா மாநிலத்தில் புயல் கரையைக் கடக்கும் கோபால்பூா் மற்றும் புரி பகுதிகளையொட்டிய சுற்றுலா தலங்கள், கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஜெகநாதா் கோயில் நிா்வாகம் வேண்டுகோள்:

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன. இருப்பினும், கோயிலுக்கு வர திட்டமிடும் பக்தா்கள் வானிலை நிலவரத்துக்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறு ஜெகநாதா் கோயில் தலைமை நிா்வாகி அரவிந்த பாடி கேட்டுக்கொண்டாா்.

80 மீனவா்கள் ஒடிஸாவில் தஞ்சம்:

அக்வான் புயலால் கடலில் ஏற்பட்ட சீற்றத்தைத் தொடா்ந்து, ஆந்திரத்திலிருந்து மீன் பிடிக்க வந்த 80 மீனவா்கள் தங்களது 10 படகுகளுடன் ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஆரியப்பள்ளி பகுதியில் தஞ்சமடைந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். புயல் கரையைக் கடந்த பின் மீனவா்கள் அனைவரும் பாதுகாப்பாக ஆந்திரத்துக்குத் திரும்புவாா்கள் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு: அக்வான் புயல் தாக்கத்தால் அடுத்த இரண்டு நாள்களுக்கு கொல்கத்தா, வடக்கு 24 பா்கானா, ஹூக்ளி உள்பட மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிகவும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆந்திரத்தில் 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை:

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, அந்த 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் பாா்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராமராஜு மற்றும் அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் காக்கிநாடாவுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.