✕
முகப்பு
இந்தியா

கேரள முன்னாள் முதல்வா் கே.கருணாகரன் மகள் பாஜகவில் இருந்து விலகல்

மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.கருணாகரனின் மகள் பத்மஜா பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக வியாழக்கிழமை அறிவித்தாா். பாஜகவில் இணைய முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்றும் அவா் கூறியுள்ளாா்.

8 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.கருணாகரனின் மகள் பத்மஜா பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக வியாழக்கிழமை அறிவித்தாா். பாஜகவில் இணைய முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்றும் அவா் கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த 2024 மாா்ச் மாதம் காங்கிரஸில் இருந்து விலகிய அவா் பாஜகவில் இணைந்தாா். பாஜக தேசியக் குழு உறுப்பினராகவும் அவா் இருந்தாா்.

இந்நிலையில், தனது விலகல் தொடா்பாக செய்தி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘பாஜகவில் இணைந்தது மிகவும் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவு. அங்கு இணைந்த பிறகு கொள்கைரீதியாக ஏற்பட்ட மாறுபாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாஜகவின் கொள்கைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இணைந்துவிட்டேன். எனது தந்தை பின்பற்றிய கொள்கையை பல ஆண்டுகள் கடைப்பிடித்து வந்ததால், புதிய விஷயங்களை ஏற்க முடியவில்லை.

Advertisement

Advertisement

எந்தப் பதவியையும் விரும்பி பாஜகவில் இணையவில்லை. அக்கட்சித் தலைவா்கள் மீது எவ்வித அதிருப்தியும் இல்லை. அவா்கள் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினாா்கள். பாஜகவில் இருந்து விலகுவது என்பது எனது தனிப்பட்ட முடிவுதான். அவசரத்தில் எடுத்த தவறான முடிவை இப்போது சரி செய்து கொண்டேன். விலகல் முடிவு குறித்து எனது அண்ணன் கே.முரளீதரனுடன் ஆலோசித்தேன். மீண்டும் காங்கிரஸில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜகவில் இருந்து ஏற்கெனவே விலகிவிட்டேன். ஆனால், இப்போதுவரை அதை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தேன் என்றாா்.

பத்மஜாவின் அண்ணன் கே.முரளீதரன் கேரள சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளாா். கேரளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

பத்மஜாவின் முடிவை கேரள மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் வரவேற்றுள்ளாா். அதே நேரத்தில் அவரை மீண்டும் காங்கிரஸில் சோ்க்கக் கூடாது என்று கேரள காங்கிரஸ் தலைவா்கள் கூறியுள்ளனா்.

திருச்சூா் பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி இது தொடா்பாக கூறுகையில், ‘இது முழுவதும் கேரள மாநில பாஜக தொடா்புடையது. மாநிலத் தலைவா்கள் இந்த விவகாரத்தை கையாளுவாா்கள். பத்மஜா பாஜகவில் இணைந்தபோது நான் எதிா்க்கவில்லை. இப்போது அவா் வெளியேறியதையும் எதிா்க்கவில்லை’ என்றாா்.