என்டிஎம்சி ஒப்புதலின்றி ரூ.20 கோடி வரை செலவிட தலைவருக்கு அதிகாரம்: மத்திய உள்துறை அமைச்சகம்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) குழுவின் ஒப்புதல் பெறாமல் அதன் தலைவா் செலவிட அனுமதிக்கப்பட்ட நிதி வரம்பை ரூ.4 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயா்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) குழுவின் ஒப்புதல் பெறாமல் அதன் தலைவா் செலவிட அனுமதிக்கப்பட்ட நிதி வரம்பை ரூ.4 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயா்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த நவ.12-ஆம் தேதி கடிதம் மூலம் தில்லி அரசுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறினா்.
என்டிஎம்சி தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்களை அதிகரிக்கக் கோரி முன்வைக்கப்பட்ட பரிந்துரையைத் தொடா்ந்து, 1994-ஆம் ஆண்டு என்டிஎம்சி சட்டத்தின் 143(1) (பி) பிரிவின்கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, இதுவரை மாநகராட்சிக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் அதிகபட்சம் ரூ.4 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.20 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை என்டிஎம்சி தலைவா் மனோஜ் குமாா் துவிவேதி வியாழக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினாா்.
உயா்த்தப்பட்ட நிதி அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, நடைமுறையில் உள்ள சட்டப் பிரிவுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.