உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மி உடன் சமாஜவாதி தொகுதிப் பங்கீடு பேச்சு! பிரசாரத்தில் சிஜேபி?
உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் சமாஜவாதி கூட்டணிக்கு ஆதரவாக சிஜேபி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு...

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜவாதி கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட, தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை, இன்று (நவ. 20) சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
ஏற்கெனவே, இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலர் திபாங்கர் பட்டாச்சார்யாவை நேற்று அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், பெரும் கட்சிகளான காங்கிரஸ் - சமாஜவாதி இடையே விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சமாஜவாதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆம் ஆத்மி மற்றும் சிபிஐ (எம்-எல்) ஆகிய கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதிகள் வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் மூலம் மக்களிடையே ஆதரவைப் பெற்ற, சிஜேபியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மற்றும் மூத்த நிர்வாகி அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்கள்.
மேலும், சிபிஐ (எம்-எல்) மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் சங்கத் (ஏஐஎஸ்ஏ) தலைவர் நேஹா போராவும் இந்தப் போராட்டங்கள் மூலம் நன்கு அறியப்படுகிறார். இதனால், அக்கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டால், சமாஜவாதிக்கு ஆதரவாக இளம் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.