அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து!
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்வான் புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் அதி தீவிரப் புயலாக மாறி ஒடிஸாவின் கோபால்பூர் அருகே நேற்று (நவ. 20) காலை 8.30 மணியளவில் கரையைக் கடந்தது.
ஒடிஸாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
புயல் காரணமாக நேற்று முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முன்டா விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்களைத் தரையிறக்க 1,200 மீ முதல் 1,500 மீ வரையுள்ள தூரத்தைப் பார்வையிட வானிலை தெளிவாக இருக்கவேண்டும். ஆனால், ராஞ்சி விமான நிலையத்தில் 1,000 மீ தூரம் வரை மட்டுமே தெளிவாகப் பார்க்க முடிவதாக விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்பட 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலையில் மாற்றம் இருக்காது என்றும், அதற்கடுத்த 3 நாள்களில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அடுத்த 2 நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.