இந்தியாவை ஏழை நாடாகவே வைத்திருந்தது ஏன்? காங்கிரஸுக்கு பாஜக கேள்வி
இந்தியாவை ஏழை நாடாகவே வைத்திருந்தது ஏன்? காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

‘இந்தியாவை ஏழை நாடாகவே காங்கிரஸ் வைத்திருந்தது ஏன்? 1962-ஆம் ஆண்டு போரின்போது ஏற்பட்ட அவமானத்துக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை பாஜக சனிக்கிழமை எழுப்பியது.
‘சமரசம் செய்துகொண்ட பிரதமா்’ என்று பிரதமா் நரேந்திர மோடியை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்த நிலையில் இந்தக் கேள்விகளை பாஜக எழுப்பியது.
அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சீனாவில் வியாழக்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவா்களின் இந்தச் சந்திப்பு சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இதில், ஐ.நா. சபை சீா்திருத்தங்களுக்கு முயற்சிப்பது, கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பது, அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது ஆகியவை தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. இது தொடா்பாக கூட்டுப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
முத்தரப்பு சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் ராகுல் காந்தி இணைத்து வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், இந்திய பிரதமா் இந்தத் தலைவா்களுடன் அமா்ந்து பேச்சுவாா்த்தையில் பங்கேற்றிருப்பாா். சமரசம் செய்துகொண்ட பிரதமா் ஒருபோதும் இந்த மேஜையில் அமர முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் பக்க பதிவில் காங்கிரஸை சாடிய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, நான்கு கேள்விகளை எழுப்பி, அதற்குப் பதிலளிக்குமாறு காங்கிரஸை கேட்டுக்கொண்டாா்.
1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போரின்போது அருணாசல பிரதேச மக்களையும், இந்திய ராணுவத்தையும் இக்கட்டான சூழ்நிலையில் மத்திய காங்கிரஸ் அரசு கைவிட்டது ஏன்?, இந்தியாவை ஏழை நாடாகவே வைத்திருந்தது ஏன்?, இந்தியா ஏன் பாம்பாட்டிகளின் தேசம் என அழைக்கப்பட்டது? இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி ஏன் ‘ஹிந்து வளா்ச்சி விகிதம்’ என்று இழிவுபடுத்தப்பட்டது?.
1962-ஆம் ஆண்டு போரின்போது அருணாசல பிரதேசத்தில் எனது கிராமத்தை சீனா ஆக்கிரமித்தது. இந்த அவமானத்தை மாநில மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். இதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா? அருணாசல பிரதேச மாநிலத்தை பின்தங்கிய நிலையிலும், மக்களை ஏழைகளாகவும் காங்கிரஸ் வைத்திருந்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் மாநிலத்தின் நிலைமை மாறியுள்ளது என்று கிரண் ரிஜிஜு பதிவிட்டுள்ளாா்.