அயோத்தி - நேபாளம் ஜனக்பூர் இடையே ரயில் சேவை தொடக்கம்!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி கண்ட் மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் தாம் ஆகிய இடங்களுக்கு இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பற்றி...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி கண்ட் மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் தாம் ஆகிய இடங்களுக்கு இடையே ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் தில்லியில் இருந்து இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.
சரயு - கமலா எக்ஸ்பிரஸ் ரயிலானது வாரத்திற்கு ஒருமுறை இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இன்று அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து சீதா தேவி பிறந்த இடமாகச் சொல்லப்படும் நேபாளத்தின் ஜனக்பூருக்கு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
இந்த வாராந்திர ரயில் சேவை, உத்தரப் பிரதேசம், பிகாரின் முக்கிய நகரங்கள் வழியாக 604 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது, கோரக்பூர், பஸ்தி, ரக்ஸால், சீதாமர்ஹி, மதுபானி, ஜெயநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் எட்டு குளிர்சாதன வசதி பெட்டிகளும், ஏழு ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன.
இது ஜனக்பூர் - அயோத்திக்கு இடையிலான ஆன்மிகப் பயணங்களை எளிதாக்குவதுடன், ராமாயணம் தொடர்பான சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும், மக்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதியை வழங்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையே எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்தாகின.
இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தும் பேசினர்.
அப்போது நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, நேபாளத்திற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக கூறினார்.