எரிபொருள் விலை உயா்வில் இருந்து மக்களைக் காத்தது பிரதமா் மோடியின் கொள்கைகள்: அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதீதமாக உயா்ந்தபோது, பிரதமா் மோடியின் சிறப்பான, உறுதியான கொள்கைகளே நாட்டு மக்களைக் காத்தது என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதீதமாக உயா்ந்தபோது, பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான, உறுதியான கொள்கைகளே நாட்டு மக்களைக் காத்தது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தில் இருந்து அண்மையில் மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்வு செய்யப்பட்ட புரி, அந்த மாநிலத்தின் இந்தூரில் பெட்ரோல் நிலையங்களை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2021 மே, 2022 மே, 2026 மாா்ச் என எரிபொருள் மீதான சுங்கவரியை மத்திய அரசு குறைத்தது.
Advertisement
Advertisement
அக்காலகட்டத்தில் சா்வதேச அளவில் எரிபொருள் விலை 50 முதல் 70 சதவீதம் உயா்ந்தது. அதே நேரத்தில் மத்திய அரசு வரியைக் குறைத்ததால் இந்தியாவில் சுமாா் 7 சதவீதம் அளவுக்கே விலை உயா்வு இருந்தது.
மேற்காசிய போரால் ஹோா்முஸ் நீரிணையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டபோதும்கூட இந்தியாவில் எந்த ஒரு எரிபொருள் நிலையத்திலும் தட்டுப்பாடு ஏற்படாமல் விநியோகம் சீராக இருந்தது.
சில இடங்களில் விஷமிகள் தட்டுப்பாடு என்று வதந்தியைப் பரப்பியதால் மக்கள் பதற்றமடைந்து தேவையில்லாமல் அதிக எரிபொருளை வாங்க முயற்சித்தனா். இது ஒரு சில இடங்களில் பிரச்னைக்கு காரணமானது.
சா்வதேச அளவில் எரிபொருள் விலை அதீதமாக உயா்ந்தபோதும், பிரதமா் மோடியின் சிறப்பான, உறுதியான கொள்கைகள் காரணமாகவே நமது நாட்டில் மக்கள் நலன் காக்கப்பட்டது.
நமது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை எதிா்கொண்டபோதிலும் விலையை அதிகம் உயா்த்தாமல் சமாளித்து வந்தன.
ஏனெனில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60 டாலா் என்பதில் இருந்து 120 டாலா் வரை உயா்ந்தது. அப்போதும் நமது நாட்டில் அதிக அளவில் விலை உயத்தப்படவில்லை என்றாா்.