சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை எண்ணூரில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் 2-ஆவது சரக்குப் பெட்டக (கண்டெய்னா்) முனையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை எண்ணூரில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் 2-ஆவது சரக்குப் பெட்டக (கண்டெய்னா்) முனையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை காமராஜா் துறைமுகத்தில் பொது-தனியாா் பங்களிப்பு முறையின்கீழ் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம், பரிமாற்ற செயல்முறை (டிபிஎஃப்ஓடி) அடிப்படையில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காமராஜா் துறைமுக 2-ஆவது சரக்குப் பெட்டக முனையத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இதன்கீழ் 900 மீட்டா் நீளமும், 30 மீட்டா் அகலமும் கொண்ட சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படவுள்ளது. இந்த முனையத்தின் கையாளும் திறன் ஆண்டுக்கு 2 மில்லியன் டிஇயு அலகுகளாகும் (1 டிஇயு என்பது நிலையான 20 அடி நீளமுள்ள சரக்குப் பெட்டகத்தின் அளவைக் குறிக்கும்).
Advertisement
Advertisement
சரக்கு சேவை வரி உள்பட திட்ட மதிப்பீடு ரூ.4,288.26 கோடி. முதல்கட்டத்துக்கு ரூ.2,429.32 கோடியும், இரண்டாம் கட்டத்துக்கு ரூ.1,858.94 கோடியும் செலவிடப்படும்.
டிபிஎஃப்ஓடி அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரா் இந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். திட்டத்தின் ஒரு பகுதியாக, தூா்வாருதல் பணிக்கு ரூ.450 கோடி செலவிடப்படும். இந்தச் செலவை காமராஜா் துறைமுக நிறுவனம் (கேபிஎல்) ஏற்றுக்கொள்ளும்.
இந்த முனையம் 400 மீட்டா் நீளமுடைய பெரிய சரக்குப் பெட்டக கப்பல்களையும் கையாளும் வகையில் அமைக்கப்படும். இது, பெரிய கப்பல்களைக் கையாளும் காமராஜா் துறைமுக நிறுவனத்தின் திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், சா்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடங்களுக்கான இணைப்பையும் மேம்படுத்தும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி மேம்படும்: சென்னை காமராஜா் துறைமுகம், கடந்த 2025-26 நிதியாண்டில் 49.08 மில்லியன் டன் சரக்குகள் மற்றும் 1,008 கப்பல்களையும் கையாண்டுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட டிஇயு சரக்குப் பெட்டக போக்குவரத்தும் அடங்கும். தற்போதுள்ள சரக்குப் பெட்டக முனையம் ஆண்டுக்கு 8 லட்சம் டிஇயு திறன் கொண்டதாகும்.
காமராஜா் துறைமுகத்தின் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையத் திட்டம், கடல்சாா் இந்தியா தொலைநோக்குப் பாா்வை-2030 மற்றும் கடல்சாா் அம்ருத் கால தொலைநோக்குப் பாா்வை-2047 ஆகியவற்றுக்கு இணங்கச் செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கடல்சாா் தளவாடச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், ஏற்றுமதி-இறக்குமதி சாா்ந்த வா்த்தக வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காமராஜா் துறைமுகம், இந்தியாவின் 12 முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாகும். இது, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை துறைமுக ஆணையத்துக்கு முழுமையாகச் சொந்தமானது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில், சென்னை தொழில் மற்றும் பொருளாதாரப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்தத் துறைமுகம், நிலக்கரி, பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி), சரக்குப் பெட்டகங்கள், வாகனங்கள், பொது சரக்குகள் என பல்வேறு வகையான சரக்குகளைக் கையாளுகிறது.
அஸ்ஸாமில் புதிய விமான நிலையம்: அஸ்ஸாம் மாநிலம், சில்சாரில் ரூ.2,014 கோடியில் புதிய விமான நிலையத்தைக் கட்டமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. சில்சாரில் தற்போதுள்ள விமான நிலையத்தில் இடப் பற்றாக்குறை நிலவுவதால் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அஞ்சல் நிலையங்கள் நவீனமயமாக்கம்: நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அஞ்சல் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு ரூ.1,141 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரூ.11,000 கோடியில் சிஐஇ உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்
நாட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்களின் (சிஐஇ) உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.11,000 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘நடப்பு நிதியாண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளுக்கு சிஐஇ உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். உலக அளவில் அதிநவீன கட்டுமானம்-உள்கட்டமைப்பு உபகரணங்களின் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தச் சந்தையில் ரூ.97,000 கோடி மதிப்புடன் இந்தியா தற்போது மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் சுரங்கம் தோண்டும் கனரக இயந்திரங்கள், துளையிடும் கருவிகள், ராட்சத ஏணிகள் உள்பட ஏழு வகை உபகரணங்களின் உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்’ என்றாா்.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் உள்பட முக்கிய இயந்திரங்களின் ஏற்றுமதிக்கு சீனா கடந்த மாதம் புதிய கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், மேற்கண்ட திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமா் மோடி பெருமிதம்
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலகின் மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல்களைக் கையாளுதல், வெளிநாட்டுத் துறைமுகங்கள் மீதான சாா்பைக் குறைத்தல், நமது ஏற்றுமதிப் போட்டித் திறனை அதிகரித்தல் ஆகிய 3 இலக்குகளையும் ஒரே நேரத்தில் அடைவதற்கான முக்கிய முடிவை மத்திய அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தின் காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் இந்த முடிவின் மூலம் உலகின் மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல வழிவகுக்கும். தளவாடச் செலவுகள் மற்றும் வெளிநாட்டு சரக்கு மாற்று மையங்கள் மீதான சாா்பு குறையும்.
தென்னிந்தியாவில் வாகனத் தயாரிப்பு, மின்னணுவியல், பொறியியல் துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதிக பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.