சொத்துக்களை மறைத்து ரூ. 6 கோடி கடன் மோசடி செய்த குற்றவாளி நீலாங்கரையில் கைது
தனியார் நிதி நிறுவனத்தை ஏமாற்றிய முக்கிய குற்றவாளி பற்றி..

சொத்துக்களை மறைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, நீலாங்கரையில் முக்கிய குற்றவாளியைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் எம்/எஸ் பேஸ்மேன் ஃபைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் குமார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ரூ. 6 கோடி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
புகாரின்படி, மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அடைமானம் வைத்து, தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ. 6 கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால், அந்தச் சொத்துக்கள் ஏற்கெனவே கோடக் மகிந்திரா வங்கியில் அடைமானம் வைக்கப்பட்டிருந்ததையும், அதே சொத்துக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இணைப்பு உத்தரவு பிறப்பித்திருந்ததையும் மறைத்து கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியைக் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை 10 மணியளவில் நீலாங்கரையில் வைத்து, இவ்வழக்கின் முதல் குற்றச்சாட்டப்பட்ட நபரான மனோகர் பிரசாத் (63), தந்தை ஆனந்த்ராவ் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலை மறைவு குற்றவாளியைக் கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.