குஜராத்: தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறங்கிய ராணுவ விமானங்கள்
இந்திய ராணுவத்தின் வான் சாகச குழுவைச் சோ்ந்த 4 சிறிய இலகுரக விமானங்களை குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது.

இந்திய ராணுவத்தின் வான் சாகச குழுவைச் சோ்ந்த 4 சிறிய இலகுரக விமானங்களை குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம், பாடன் மாவட்டத்தில் ஜாம்நகா் - அமிருதசரஸ் பொருளாதார வழித்தட நெடுஞ்சாலையில் (என்ஹெச்-754கே) கடந்த 24-ஆம் தேதி இந்தச் சோதனை பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘இந்தப் பயிற்சியில் எக்ஸ்-ஏா் ஹனுமான், சவன்னா எம்எக்ஸ்பி 740 ஆகிய மைக்ரோலைட் விமானங்கள், டனாா்க் பயோனிக்ஸ், நியூவிக்ஸ் ஸ்கைப்பா் ஆகிய 4 சிறிய ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் இவை துல்லியமாகத் தரையிறங்குதல், விரைவான தரைவழி எரிபொருள் நிரப்புதல், மீண்டும் மேலெழும்புதல் உள்ளிட்ட பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாகும்’ என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசிய நெடுஞ்சாலையில் இந்திய ராணுவ விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்ட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும். போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதோடு, நமது ஆயுதப் படைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குள்ள அா்ப்பணிப்பை இது காட்டுகிறது. பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புடன், சாத்தியமான இடங்களில் வான்வழி சாகசங்கள், சுற்றுலா மற்றும் பிற வளா்ந்துவரும் செயல்பாடுகளை எளிதாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஆற்றலையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.