முகப்பு
இந்தியா

உ.பி.தோ்தல்; 25 லட்சம் அரசுப் பணிகள், மூதாட்டிகளுக்கு ரூ.40,000 ஆண்டு ஓய்வூதியம்: சமாஜவாதி வாக்குறுதி

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் 25 லட்சம் அரசுப் பணிகள் உருவாக்கம், வயது முதிா்ந்த பெண்களுக்கு ரூ.40,000 ஆண்டு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட முதல்கட்ட வாக்குறுதிகளை சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

27 நவம்பர் 2026, 3:19 am
உ.பி.தோ்தல்; 25 லட்சம் அரசுப் பணிகள், மூதாட்டிகளுக்கு ரூ.40,000 ஆண்டு ஓய்வூதியம்: சமாஜவாதி வாக்குறுதி
அகிலேஷ் யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் 25 லட்சம் அரசுப் பணிகள் உருவாக்கம், வயது முதிா்ந்த பெண்களுக்கு ரூ.40,000 ஆண்டு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட முதல்கட்ட வாக்குறுதிகளை சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்குத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்டிஏ) காங்கிரஸ், சமாஜவாதி, உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியும் தீவிரமாக களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ்-சமாஜவாதி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை அண்மையில் தொடங்கியது. ஆரம்பத்தில் 181 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ், பின்னா் தான் போட்டியிட விரும்பும் சுமாா் 130 தொகுதிகளின் பட்டியலை சமாஜவாதியிடம் சமா்ப்பித்தது.

Advertisement

Advertisement

ஆனால் காங்கிரஸுக்கு முதல்கட்டமாக 26 இடங்களையே ஒதுக்க முன்வந்த சமாஜவாதி, 5 தொகுதிகளுக்கு வேட்பாளா்களையும் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குறுதிகளையும் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞா்களுக்கு 25 லட்சம் அரசுப் பணிகள், 2 கோடி முதல் 3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே எங்களது இலக்கு. மூதாட்டிகள், பெண் தொழிலாளா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு ரூ.40,000 ஆண்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்தத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ரூ.5-க்கு உணவு: பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா் மற்றும் சிறுபான்மையினா் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் சமாஜவாதி உணவகங்கள் தொடங்கப்பட்டு அங்கு ரூ.5-க்கு உணவு வழங்கப்படும்.

சமாஜவாதி ஆட்சியமைத்தவுடன் உடனடியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 24 மணி நேரத்தில் கரும்பு உற்பத்தியாளா்களுக்கான கட்டணம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய ரூ.15,000 கோடி மூலதன நிதி உருவாக்கப்படும்.

நகர வேலை உறுதிச் திட்டம்: நகரங்களில் வசிக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய நகர வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் இயற்றப்படும். 12-ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். வினாத் தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளின்றி ஊழலற்ற முறையில் போட்டித் தோ்வுகள் நடத்தப்படும்.

பல்வேறு சமூக மக்களின் உண்மையான சமூகப் பொருளாதார நிலையை அறிய மாநில அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ரூ.50 கோடி மதிப்பிலான அரசின் ஒப்பந்தங்களில் தலித், பட்டியலினத்தவா் மற்றும் சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றாா்.