முகப்பு

உ.பி. தேர்தல்: காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டின் போதே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ்!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போதே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளதைப் பற்றி...

உ.பி. தேர்தல்: காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டின் போதே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ்!
அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி - கோப்புப் படம் | PTI
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போதே சமாஜவாதி கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

அடுத்தாண்டு (2027) மே மாதம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகள் இடையே தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஆரம்பத்தில் 181 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ், பின்னர் தான் போட்டியிட விரும்பும் சுமார் 130 தொகுதிகளின் பட்டியலை சமாஜவாதியிடம் சமர்ப்பித்தது. இதுதொடர்பாக சமாஜவாதி -காங்கிரஸ் இடையிலான அதிகாரபூர்வ முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை, புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி இல்லத்தில் நடைபெற்றது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸுக்கு 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.

Advertisement

Advertisement

காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது. இதில், நான்கு பேர் தற்போது எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்து வருகின்றனர்.

உமர் அலி கான் (பெஹத்), ஆஷு மாலிக் (சஹாரன்பூர்), நஹித் ஹசன் (கைரானா), மெஹபூப் அலி (அம்ரோஹா) மற்றும் ஜோதி லோதி (லலித்பூர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பெஹத் மற்றும் சஹாரன்பூர் ஆகிய 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தனக்கு வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சமாஜவாதி கட்சி திடீரென அறிவித்து காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

முன்னதாக, 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி, அப்போது காங்கிரஸுக்கு 105 தொகுதிகளை வழங்கியது. ஆனால் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி படுதோல்வி அடைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.

2022 உத்தரப் பிரதேசத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. 2022-ஆம் ஆண்டில் 399 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2.33 சதவிகித (21.51 லட்சம் வாக்குகள்) வாக்குகளை மட்டுமே பெற்றது. அதே தேர்தலில் 399 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 387 இடங்களில் தங்களது வைப்புத்தொகையை இழந்தது நினைவுகூரத்தக்கது.

summary

The Samajwadi Party announced its first list of five candidates, including four sitting MLAs, for the 2027 Uttar Pradesh Assembly polls. The move came amid a seat-sharing deadlock with the Congress, which is seeking to contest around 130 constituencies against the SP's proposed allocation of 26 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.