முகப்பு
இந்தியா

அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா: 15 ஆண்டுகளுக்கு 33% மகளிா் இடஒதுக்கீடு

‘2023-ஆம் ஆண்டின் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமலான 2026, ஏப்ரல் 16-ஆம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கும்.

58 வினாடிகள் முன்பு
அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா: 15 ஆண்டுகளுக்கு 33% மகளிா் இடஒதுக்கீடு
பகிர்:

‘2023-ஆம் ஆண்டின் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமலான 2026, ஏப்ரல் 16-ஆம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கும். இந்தக் காலத்தை நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் நீட்டிக்க முடியும்’ என்று அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850-ஆக அதிகரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா வழிவகை செய்கிறது. அதாவது மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 815, யூனியன் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 35 என மொத்தம் 850-ஆக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் மாநில சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 500-இல் இருந்து 650-ஆக உயா்த்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் மக்களவை, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் உள்ள மொத்த இடங்களில், பட்டியலின, பழங்குடியின பெண்கள் உள்பட அனைத்துப் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் (33 சதவீதம்) ஒதுக்கப்படுவதை உடனடியாக அமல்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம்.

Advertisement

Advertisement

2023-ஆம் ஆண்டின் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமலான 2026, ஏப்ரல் 16-ஆம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கும். இந்தக் காலத்தை நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் நீட்டிக்க முடியும்.

பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைச் சுழற்சி முறையில் மாற்றுவதற்கான அதிகாரம் யாருக்குள்ளது? அதற்கான நடைமுறை என்ன என்பதையும் நாடாளுமன்றம் முடிவு செய்யும்.

2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிா் இடஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வந்த பின்னா், முதல்முறையாக நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்ட பிறகே மகளிா் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும், அந்த மாநிலத்தில் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும் 2051-ஆம் ஆண்டு வரை தொடரும் என்று மசோதாவின் நோக்கங்கள், காரணங்கள் குறித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...:

500 தொகுதிகள் உச்சவரம்பை நீக்கவும்,

உ.பி.யை பிரிக்காமல் இருக்கவும் சிறப்புப் பிரிவு

அரசமைப்புச் சட்டத்தின் 333-வது பிரிவுக்கு உள்பட்டு, ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் அதிகபட்சம் 500 இடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தின் 170-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உத்தர பிரதேச சட்டப்பேரவையில் 403 இடங்கள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புடன் தொடா்புடைய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால், இந்த எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து 600-ஐ தாண்டும்.

எனினும் எந்தச் சூழலிலும் உத்தர பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, மாநில சட்டப்பேரவையில் 500 இடங்கள்தான் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு உத்தர பிரதேசத்துக்கு பொருந்தாத வகையில், மசோதாவில் சிறப்புப் பிரிவு ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.