தொகுதி மறுவரையறை! தில்லி செல்லும் ஆந்திர முதல்வர், துணை முதல்வர்!
பிரதமர் மோடியை சந்திக்க ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தில்லிக்குச் செல்வதாகத் தகவல்...

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவரவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை நவ. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2 ஆம் தேதியும் கூடவுள்ளன. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை (நவ. 27) மாலை தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி. குமாரசாமி ஆகியோர் ஒன்றாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.
இத்துடன், ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் தில்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெருமளவில் கவனம் பெறும் ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரின் தில்லி பயணமானது பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தச் சந்திப்பில் தேஜகூ தலைவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.