2027-ல் பாஜக முதல்வர் யார்? தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்: உ.பி. துணை முதல்வர்
2027-ல் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து...

2027 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக முதல்வர் முகம் யார் என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என அம்மாநில துணை முதல்வர் கேஷவ் மெளர்யா இன்று (நவ. 25) தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பிரசாரப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் - சமாஜவாதி கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தொகுதிப் பங்கீட்டிலும் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் உ.பி. துணை முதல்வர் கேஷவ் மெளர்யா தெரிவித்துள்ளதாவது:
''பாஜக தனிப்பட்ட வேட்பாளரை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, கட்சியின் சின்னமான தாமரைச் சின்னத்திலேயே தேர்தலைச் சந்திக்கிறது.
எம்எல்ஏக்கள் மற்றும் மத்திய பார்வையாளர்களுடன் நடத்தப்படும் ஆலோசனைகளின் மூலமே இறுதி முடிவு எடுக்கப்படும்.
யோகி ஆதித்யநாத் தற்போதைய முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எதிர்காலத் தலைமை குறித்தோ அல்லது தான் முதல்வராவதற்கான வாய்ப்புகள் குறித்தோ ஊகிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.