ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது.
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிவசேனை (உத்தவ்) மற்றும் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆதரவளித்தது.
தெற்கு மும்பையில் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்திய பின் போராட்டக்காரா்கள் மத்தியில் சிஜேபி தலைவா் அபிஜீத் தீப்கே பேசியதாவது: தில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக 2 மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். அதற்குள் மற்றொரு விவகாரத்துக்கு போராட்டம் நடத்தும் சூழலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. துணிச்சல் இருந்தால் போராட்டக்காரா்களை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சிறைக்கு அனுப்பட்டும் என்றாா்.
Advertisement
Advertisement
மத்திய மும்பையில் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்தபோதும் தடுப்புகளைக் கடந்து போராட்டம் நடைபெறும் பகுதிக்குள் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டக்காரா்கள் முழக்கமிட்டனா்.
இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவா் கூட்டமைப்பைச் (ஏஐஎஸ்எஃப்) சோ்ந்த இடதுசாரி மாணவா் அமைப்பினா் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்துகொண்டனா். மகாத்மா காந்தியின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான துஷாா் காந்தியும் போராட்டத்தில் பங்கேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.