ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட வந்தவர்கள் கைது!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்த மாணவர் அமைப்பினர் கைது...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்த மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி இந்தியா முழுவதுமே போராட்டம் நடத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் இன்று தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை முதலே தில்லியில் ஜந்தர் மந்தர், தேர்தல் ஆணைய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜந்தர் மந்தரில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே திட்டமிட்டபடி இன்று பிற்பகல் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி பேரணியில் ஈடுபட்ட எஸ்எஃப்ஐ, டிஒய்எஃப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டக் களத்திற்கு வந்தவர்கள் அனைவரும் போராட்டத்தை முன்னெடுக்கும் முன்னரே போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர்.
அதேபோல ஆம் ஆத்மி கட்சியினரும் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய நிலையில்எம் பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக போராட்டம் அறிவித்துள்ளதையடுத்து தில்லியில் 12 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன, முக்கிய பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Students protest in Delhi Jantar Mantar against Gyanesh Kumar have been arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.