இந்திய விமானியைத் தாக்கிய சக விமானி ஓமனில் தடை விதிக்கப்பட்டவர்! யார் இவர்?
இந்திய விமானியைக் கத்தியால் குத்திய சக விமானி ஓமனில் தடை விதிப்பட்டவர் எனத் தகவல்...
துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில், இந்திய விமானியைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற சக விமானி மீது ஏற்கெனவே ஓமன் அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு 174 பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபை விமானம் நடுவானில் பறந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். பின்னர், ஸ்மித் மச்சாரின் முயற்சியால் வேறு இரண்டு விமானிகளால் அந்த விமானம் சௌதி அரேபியாவில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலை ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி ஹமாம் அல் ஹமாமி என்பவர் நடத்தியதாகவும், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமனைச் சேர்ந்த தந்தைக்கும், சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஓமன் நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அல்-ஹமாமி, பெரும்பாலான காலங்களை சிரியா உள்ளிட்ட நாடுகளில் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பயங்கரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்கக் கூடும் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் பயங்கரவாதத் திட்டங்கள் இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், ஏற்கெனவே ஓமன் நாட்டில் விமானங்களை இயக்குவதற்கு அல் ஹமாமிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஓமன்ஏர் எனும் நிறுவனத்தில் சக விமானியாகப் பணியாற்றிய அல்-ஹமாமி தீவிரவாத நோக்கமுடைய பொருள்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விமானங்களை இயக்குவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அவர் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஓமனில் அவர் மீது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அல்-ஹமாமியை ஃபிளைதுபை நிறுவனம் சக விமானியாகப் பணியில் சேர்த்து, அமீரகத்தில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை இயக்குவதற்கு அனுமதியளித்திருப்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கங்கள் இருக்கிறதா என்பது குறித்து அமீரக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஓமனில் தடை விதிக்கப்பட்ட விமானி எப்படி அமீரக நிறுவனத்தால் பணியில் சேர்க்கப்பட்டார் எனக் கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Omani government had already imposed a ban on the co-pilot who attempted to stab an Indian pilot to death on a flight from Dubai to Israel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.