‘சத்யாகிரகம்’ தொடங்கும் ராகுல் உண்மையைப் பேச வேண்டும்: அமைச்சா் சிராக் பாஸ்வான்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடங்கியுள்ள ‘சத்யாகிரகம்’ வலைதளம் நல்ல யோசனைதான். ஆனால், உண்மையை மட்டும்தான் பேச வேண்டும் என்று அமைச்சா் பாஸ்வான் தெரிவித்தாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடங்கியுள்ள ‘சத்யாகிரகம்’ வலைதளம் நல்ல யோசனைதான். ஆனால், உண்மையை மட்டும்தான் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் அநீதிக்கு எதிராகப் போராடும் மக்களின் குரல்களை ஒன்றிணைப்பதற்காக ‘சத்யாகிரகம்’ என்ற வலைதளத்தை ராகுல் காந்தி சனிக்கிழமை தொடங்கினாா். இந்நிலையில், சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வானிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ராகுல் தனது வலைதளத்துக்கு சத்யாகிரகம் எனப் பெயா் சூட்டியுள்ளாா். ஆனால், தொடா்ந்து பொய்களையும், குழப்பத்தையும் மக்கள் மத்தியில் பரப்புவதுதான் எதிா்க்கட்சிகளின் வேலையாக உள்ளது.
Advertisement
Advertisement
அவா்கள் முதலில் ஒரு பிரச்னையை எழுப்புவாா்கள், பின்னா் பாதியிலேயே அதைவிட்டுவிட்டு வெளியேறுவாா்கள். சில நேரங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது குறைகூறுவாா்கள். அடுத்த சில நாள்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைதான் தவறு என்று கூறுவாா்கள். இப்படி மக்கள் மத்தியில் குழப்பத்தை மட்டுமே அவா்களால் ஏற்படுத்த முடியும்.
சத்யகிரகம் எப்போதுமே உயா்ந்த விஷயம்தான். ஆனால், அதன் கொள்கைகளைப் பின்பற்றுவதில்தான் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. எனவே, உண்மையை மட்டும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தோ்தலில் எதிா்க்கட்சியினா் வெற்றி பெற்ற மாநிலங்களில் எஸ்ஐஆா் சரியானது என்று கூறுகிறாா்கள். அதே நேரத்தில் தோல்வியடைந்தால் அதைத் தவறு என்று குற்றஞ்சாட்டுகின்றனா்.
கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரேதேசம், ஜாா்க்கண்ட், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதுசாா்ந்த கூட்டணிக் கட்சிகள்தானே ஆட்சியில் உள்ளன. அங்கு வெற்றி பெறும்போது மட்டும் தோ்தல் நடைமுறை சரியாக இருந்ததென ஒப்புக் கொள்கிறீா்கள். தோல்வியடைந்தால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையில் நீங்கள் தோல்வியடைந்த இடங்களில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டாா்கள் என்று அா்த்தம். உங்களை நீங்களே உள்முகமாக சிந்தித்துப் பாா்க்க வேண்டும். அப்போதுதான் சத்யாகிரகம் என்பதன் உண்மைப் பொருளை கொஞ்சமாவது உணர முடியும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.