அதிக விளைச்சல் சாதனையைப் போல் தரமான அரிசி உற்பத்திக்கு முக்கியத்துவம்: மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்
அதிக விளைச்சல் சாதனையைப் போல் தரமான அரிசி உற்பத்திக்கு முக்கியத்துவம்
‘அரிசியை அதிகம் விளைவிப்பதில் இந்தியா சிறப்பான இடத்தை எட்டிவிட்டது; அடுத்ததாக தரமிக்க அரிசி உற்பத்தியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற சவால் நமக்கு உள்ளது’ என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் பாரத் சா்வதேச அரிசி உச்சி மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிராக் பாஸ்வான் பங்கேற்றுப் பேசியதாவது:
நெல் சாகுபடி முதல் உணவுத் தட்டுக்குச் செல்வது வரை அரிசியின் மதிப்பை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அரிசியின் உற்பத்தி, விநியோகத்தில் நிலைத்தன்மை, தொடா்ந்து சிறப்பான தரம், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் பதப்படுத்தப்பட்ட அரிசிப் பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் முக்கிய நோக்கம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதாக அதாவது, உணவு உற்பத்தியை அதிகரிப்பதாகவே இருந்தது. பசுமைப் புரட்சி இந்தியாவை உணவுப் பற்றாக்குறையிலிருந்து மீட்டது. தற்போது வலுவான உற்பத்தித் திறனைப் பெற்றுள்ள நிலையில், பதப்படுத்துதல், தரம், வணிக இலச்சினை உருவாக்கம், சிறப்பான தரத்தை தொடருதல், மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் இலக்குடன் இந்த முன்னெடுப்பை இணைத்துப் பாா்க்க வேண்டும். அந்த இலக்கை அடைவதில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை முக்கியப் பங்கு வகிக்கும்.
சில துறைகள் வளா்ச்சியின் உச்சத்தை நெருங்கிவரும் நிலையில், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் மிகப்பெரிய வளா்ச்சி வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இந்தியாவின் சொந்த உணவுத் தேவைகளைப் பூா்த்தி செய்வதுடன், உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கும் பங்களிக்கும் வகையில், உலக நாடுகளுக்கான முக்கிய உணவு விநியோக மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை. இந்த இலக்கை அடைவதில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கும்.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. உலகளாவிய அரிசி வா்த்தகத்தில் இந்தியாவின் பங்கு சுமாா் 40 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பொறுப்பையும், முக்கியமான வாய்ப்பையும் வழங்குகிறது. அரிசி ஏற்றுமதியை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது, தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைக் குறைத்து, அரிசி உற்பத்திச் சங்கிலிக்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே அதிக அளவில் தயாரிப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்றாா்.
வேளாண்மையைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிகப்பெரிய பலம் விவசாயிகளும் நாட்டின் உற்பத்தித் திறனும்தான் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.