இந்தியாவில் தயாராகும் பயணிகள் விமானம்! 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு!
இந்தியாவில் தயாராகும் முதல் உள்நாட்டு பயணிகள் விமானம் பற்றி..
இந்தியாவின் முதல் உள்நாட்டு சிவில் விமானம் (பயணிகள் விமானம்) அடுத்த இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற இந்தியத் தர மேலாண்மை அறக்கட்டளையின் கருத்தரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்துகொண்டு பேசினார்.
இந்த கருத்தரங்களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டி.வி. நரேந்திரனுடன் நடைபெற்ற அமர்வில் அவர் பங்கேற்றார்.
Advertisement
Advertisement
நாட்டில் ஜெட் என்ஜின்களைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு பரிசீலிக்கும், ஆனால் அது நீண்ட காலம் எடுக்கக்கூடிய செயல்முறை.
நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அமைச்சர், விமான நிறுவனங்கள் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1,600-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
தற்போது நாட்டில் 165 விமான நிலையங்கள் உள்ளன. அதில் உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் சுமார் 850 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
கூட்டு முயற்சி மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானத்தைப் பெற முடியும், அதற்கான சூழலமைப்பு வளர்ந்து வருவதையும் வலியுறுத்தினார். எனினும், அவர் இதுகுறித்த விரிவான விவரங்களை வெளியிடவில்லை.
விமானத் துறையில் உயர்தர உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களின் தரம் மற்றும் மனிதவளத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
தற்போது, விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவை இந்தியாவிலிருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதிரிப்பாகங்கள் மற்றும் சேவைகளைப் பெறுகின்றன. இந்தத் தொகை விரைவில் 10 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
நிலையான விமானப் போக்குவரத்து எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது, தொழில்துறைகளுக்கு உதவும் வகையில் கார்பன் கிரெடிட் முறையை உருவாக்குவது குறித்தும் அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.