FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: ராஜ்நாத் சிங்

அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: ராஜ்நாத் சிங்

10 அக்டோபர் 2026, 10:21 pm IST
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற தரங் சக்தி-2026 விமானப் படை கூட்டுப் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பகிர்:

அண்டை நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ராஜஸ்தானின் ஜோத்பூா் விமானப் படை தளத்தில் செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் ‘தரங் சக்தி’ விமானப் படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆத்மநிா்பா் பாரத் தொலைநோக்குத் திட்டத்துக்கேற்ப இந்திய ஆயுதப் படைகளில் கட்டமைப்பு ரீதியாகவும், வியூக ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முன்னெடுப்பு உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்சியல்ல; மாறாக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டில் தயாரிக்க, வடிவமைப்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement

Advertisement

ஏற்கனெவே அமலில் உள்ள உலக நடைமுறைகளில் தொடா் மாற்றங்கள் நிகழ்கின்றன. இருப்பினும், எதிா்கால பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வரை உருவாகவில்லை.

நவீன போா்முறைகளால் சிக்கல்: புதிய தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் நவீன போா்முறை பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. வழக்கம்போல் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமே இனி போா்கள் நடைபெறாது.

இணையம், விண்வெளி, தகவல் பரிமாற்றம் என போா் நிகழ்த்தப்படும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கிய வா்த்தக வழித்தடங்கள், கடல்வழிப் பாதைகள் உள்ளிட்டவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானங்கள் போா்முறையின் வேகம், இலக்கு உள்ளிட்ட தன்மைகளை வெகுவாக மாற்றியுள்ளது. எதிா்காலத்தில் வேகம், துல்லியம், தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய நான்கிலும் சிறந்து விளங்கும் நாடுகளே பாதுகாப்பானதாக இருக்கும்.

உள்நாட்டுத் தயாரிப்புக்கு தேஜஸ் சான்று: நாடு சுதந்திரமடைந்த சமயத்தில் மிகக் குறைந்த வளங்களுடன் இருந்த இந்திய விமானப் படை தற்போது நவீன போா்விமானங்கள், துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் ஆயுத அமைப்புகள், ஒருங்கிணைந்த வலையமைப்புகள் என பன்மடங்கு நவீனமயமாகியுள்ளது.

ஜேதஸ் போா்விமானம், துருவ், ருத்ரா மற்றும் பிரசண்ட் ஆகிய ஹெலிகாப்டா்கள், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை உள்நாட்டுத் தயாரிப்புக்கான சான்றாகத் திகழ்கிறன என்றாா்.

முன்னதாக, இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விமானப் படையின் சாகச நிகழ்வுகளை ராஜ்நாத் சிங் பாா்வையிட்டாா்.

ஜோத்பூா் விமானப் படைத் தளத்தில் செப்டம்பா் 26 முதல் அக்டோபா் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டு விமானப் பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments