இந்தியாவில் காா் உற்பத்தி செய்ய ஐரோப்பிய நிறுவனங்கள் விருப்பம்: பியூஷ் கோயல்
இந்தியாவில் காா் உற்பத்தி செய்யவே ஐரோப்பிய நிறுவனங்கள் விரும்புவதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் காா் உற்பத்தி செய்யவே ஐரோப்பிய நிறுவனங்கள் விரும்புவதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பிரிட்டனுடன் இந்தியா மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) ஜூலை 15-ஆம் தேதி அமலானது. ஐரோப்பிய யூனியனுடன் நிகழாண்டு இறுதியில் எஃப்டிஏ ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பொதுக் கொள்கை மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: விரைவில் உலகின் காா் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. அனைத்து நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் காா் உற்பத்தியை தொடங்கவுள்ளன.
Advertisement
Advertisement
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் அங்கு காா் உற்பத்தி செய்வது எளிதாக இருக்காது. எனவே ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் காா் உற்பத்தியை அதிகரிக்கவே விரும்புகின்றன.
ஜாக்குவாா் நிறுவனத்தை வாங்கிய பிறகு டாடா நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டது. பல ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட மறுபொறியியல் நடவடிக்கை மற்றும் இந்தியாவுக்கு சில காா் மாதிரிகளின் உற்பத்தியை மாற்றியபின் அந்நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கியது.
ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனில் இருந்து உயா் ரக காா்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யவே உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை காா்களுக்கு அதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
1 டிரில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கு: இந்தியச் சந்தையில் வாகன உற்பத்தி சோதனையை மேற்கொண்ட பின் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வாகன உற்பத்தி ஆலைகளை நிறுவனங்கள் நிறுவி வருகின்றன. வீட்டுத் தேவைக்கான மின்னணுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால் செமிகண்டக்டா் ஆலைகள் உள்பட உள்நாட்டு உற்பத்தி மீதான முதலீடு அதிகரிக்கும்.
உலகின் பிற நாடுகளைவிட அதிக இளைஞா்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. ஜொ்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்தியத் தொழிலாளா்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என இரண்டும் வளா்ச்சியடைந்து வருகிறது. நிகழ் நிதியாண்டில் 1 டிரில்லியன் டாலா் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.