ஏர் இந்தியா விமானத்தை யாரும் கடத்த முயலவில்லையாம்! பிறகு என்னதான் நடந்தது?
ஏர் இந்தியா விமானத்தை யாரும் கடத்த முயலவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் இன்று காலை அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானத்திலிருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த ’கடத்தல்’ எச்சரிக்கை தவறானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து தில்லி விமானம் நிலையம் நோக்கி இன்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, கடத்தல் முயற்சி எச்சரிக்கையான ’ஸ்க்வாக் 7500’ என்ற சர்வதேச குறியீட்டை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தின் விமானி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசர தரையிறக்கம் செய்ய தில்லியில் உள்ள அவசரகால விமானக் கட்டுப்பாட்டு அறை உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களையும் உடமைகளையும் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவு, காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உள்ளிட்டோர் விமானத்தில் சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) தயார்நிலையில் வைக்கப்பட்டது.
தீவிர சோதனைக்குப் பிறகு, விமானத்தின் செயல்பாடுகள் இயல்பாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், ’ஸ்க்வாக் 7500’ எச்சரிக்கை தவறானது என்று உறுதி செய்யப்பட்டது.
’ஸ்க்வாக் 7500’ எச்சரிக்கையை விமானி தவறுதலாக எழுப்பினாரா? அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தவறுதலாக கிடைத்ததா? என்பது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பயணிகளுடன் தில்லியை நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது.
ஏஐ2030 என்ற ஏர் இந்தியா விமானத்தில் 293 பயணிகளும், 13 விமான ஊழியர்களும் பயணித்தனர்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எதிர்பாராத இடையூறுகளால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். அத்துடன் அவர்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முன்னுரிமையாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Apparently, no one tried to hijack the Air India flight! So, what actually happened?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.