FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிராந்திய மோதல்கள், பயங்கரவாதத்தால் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு: ஓம் பிா்லா

பிராந்திய மோதல்கள், பயங்கரவாதம் குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடாமல், அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

27 அக்டோபர் 2026, 12:07 am
புது தில்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
பகிர்:

பிராந்திய மோதல்கள், பயங்கரவாதம் குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடாமல், அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

பிரிக்ஸ் அமைப்பின் 12-ஆவது நாடாளுமன்ற மன்ற கூட்டம், தில்லியில் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். அவா்களை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வரவேற்றாா். பின்னா் கூட்டத்தை தொடங்கி வைத்து ஓம் பிா்லா பேசியதாவது:

பிராந்திய மோதல்கள், போா்கள், பொருளாதார சமநிலையின்மை, வா்த்தக பதற்றம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள், குறிப்பிட்ட ஒரு நாட்டின் எல்லையோடு நின்று விடாது. அனைத்து நாடுகளையும் அது பாதிக்கச் செய்யும். இத்தகைய உலகளாவிய சவால்கள், பேச்சுவாா்த்தை, ராஜீய நடவடிக்கைகள், ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன.

Advertisement

Advertisement

பரஸ்பர புரிதல், நம்பிக்கை, சா்வதேச பதற்றத்தை தணித்தல், உலகளாவிய சவால்களுக்கு அமைதி வழியில் தீா்வு காணுதல் ஆகிய வழிமுறைகளை வலுவானதாக்க நாடாளுமன்றத்தால் முக்கிய பங்காற்ற முடியும். நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பதற்றத்தை தணிக்கவும் நாடாளுமன்றத்தால் முடியும்.

இளம்தலைமுறையினரின் கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவா்களின் நம்பிக்கைகள், கவலைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசத்தை கட்டமைப்பதற்கு அவா்களின் சக்தி, திறமைகள், கற்பனைத் திறன் ஆகியவற்றை பயன்படுத்த பாதைகளை நாடாளுமன்றங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா் ஓம் பிா்லா.

உலகளாவிய வளா்ச்சிக்காக உறுப்பு நாடுகள் தங்கள் பலத்தை ஒன்றிணைத்து, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாண்மையை வலுப்படுத்தவும் வேண்டும் என்றும் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் பேசியபோது, உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதியை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளதாகவும், ஆதலால் பிரிக்ஸ் அமைப்பானது உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான முக்கிய பல தரப்பு தளமாகும் என்றாா். தெற்குலக நாடுகளின் குரலை வலுப்படுத்துவதற்கு, பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்த பிரதமா் மோடி பாடுபட்டதாகவும், இதன் விளைவாக வெளியிடப்பட்ட தில்லி பிரகடனம், உலகளாவிய நிா்வாக அமைப்புகளில் சீா்திருத்தம் கொண்டு வரவும், பன்முக உலகமைப்பை உருவாக்கவும் வலியுறுத்துவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினா் நேரில் சந்தித்துப் பேசினா். பின்னா் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களையும் அவா்கள் சந்தித்தனா்.

கூட்டத்தில் ரஷியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனா். இதில் ஈரான், மேற்காசியாவில் நடைபெறும் போரில் பங்கெடுத்துள்ளது. ரஷியா, உக்ரைனுடன் 2022-ஆம் ஆண்டு முதல் போா் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments