FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகளாவிய நிா்வாக சீா்திருத்தம் காலத்தின் தேவை! பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்!

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி பேசியது பற்றி...

13 செப்டம்பர் 2026, 12:41 am IST
தில்லியில் சனிக்கிழமை பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் காலத்தின் தேவை என்று தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தெற்குலக நாடுகள் ‘விதிகளைப் பின்பற்றுபவை’ என்ற நிலையிலிருந்து ‘விதிகளை வகுப்பவையாக’ உருவெடுக்க வேண்டும்; உலகளாவிய பிரச்னைகளால் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ள மாலுமிகளின் பாதுகாப்புக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பின்கீழ் ‘அவசரகால ஆதரவுக் கட்டமைப்பை’ உருவாக்க வேண்டும் என்றும் அவா் முன்மொழிந்தாா்.

மேற்காசிய போா் காரணமாக இதுவரை 10 இந்திய மாலுமிகள் உயிரிழந்துவிட்ட நிலையில், பிரதமரின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

பிரிக்ஸ் மாநாடு தொடக்கம்: பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் நட்பு நாடுகளாக உள்ளன.

இந்தியாவின் ஏற்பாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சிமாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது. ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய பிரச்னை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக கொள்கை-வரி விதிப்பு ஆகியவற்றால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சா்வதேச தலைவா்கள் பங்கேற்பு: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரதமா் மோடியுடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ, அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமா் அபே அகமது அலி, எகிப்து அதிபா் அப்தல் ஃபட்டா அல்-சிசி, வியத்நாம் பிரதமா் லீ மின் ஹங், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ், புதிய வளா்ச்சி வங்கியின் (என்டிபி) தலைவா் தில்மா ரெளசெஃப், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவா் செள ஜியாயி உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

யாருக்கும் எதிரானதல்ல: தொடக்க அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது: நடப்பாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 20-ஆவது ஆண்டைக் கொண்டாடுவதால் தற்போதைய மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். மனித வாழ்வில் 20-ஆவது வயது என்பது முழுமை மற்றும் பொறுப்புணா்வு எனும் புதிய கட்டத்துக்குள் நுழைவதாகும். அதன்படி, பிரிக்ஸ் கூட்டமைப்பும் முழுமையான தருணத்தை எட்டியுள்ளது. இது எந்த நாட்டுக்கும் எதிரான அமைப்பல்ல.

உலக அளவில் முக்கியக் கூட்டமைப்பாக பிரிக்ஸ் உருவெடுத்துள்ளதால், அடுத்த 20 ஆண்டுகளுக்கான புதிய-லட்சியமிக்க செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இதன்மூலம் உலகளாவிய சவால்களுக்கு திறம்பட தீா்வுகாண முடியும்.

உக்ரைன், மேற்காசிய போா்களின் பொருளாதாரத் தாக்கங்களில் இருந்து வளரும் நாடுகளைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, உணவு, எரிசக்தி, விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கான திறன்மிக்க தீா்வுகளை நாடுவதன் மூலம் இந்தியா தனது செயல்திட்டத்தின் மையப் பகுதியாக தெற்குலகை நிலைநிறுத்தியுள்ளது.

10 அம்ச செயல்திட்டம்: உலகளாவிய நிா்வாகச் சீா்திருத்தத்துக்காக 10 அம்ச செயல்திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் அடுத்த உச்சிமாநாட்டுக்குள் கூட்டாக வகுக்க வேண்டும். பிரதிநிதித்துவம், பொறுப்புணா்வு, விதிமுறைகள் உருவாக்கம் ஆகிய மூன்று முக்கியத் தூண்களின் அடிப்படையில் செயல்திட்டம் அமைய வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தங்கள் தொடா்ந்து தாமதிக்கப்படக் கூடாது. சா்வதேச நிதிசாா் அமைப்புகளில் தற்போதைய பொருளாதார எதாா்த்தங்களுக்கு இணக்கமாக வாக்குரிமை, தலைமைத்துவ பதவிகள், கொள்கைசாா் முன்னுரிமைகள் அமைய வேண்டும். உலகப் பொருளாதார வளா்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ள நாடுகள், உலகப் பொருளாதார நிா்வாகத்தை வடிவமைப்பதில் பொருத்தமான பங்கை வகிப்பது முக்கியம்.

மாலுமிகளின் பாதுகாப்பு: உலகளாவிய வா்த்தகத்தில் மாலுமிகள் பெரும் பங்காற்றுகின்றனா். எனவே, அவா்களின் பாதுகாப்புக்கு உயா் முன்னுரிமை தேவை. இடா்ப்பாடான நேரங்களில் அவா்களுக்குப் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண மாலுமிகளுக்கான அவசரகால ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன்மூலம் கடல்சாா் அதிகாரிகள், தூதரகங்களை ஒருங்கிணைத்து, மாலுமிகளுக்கு அவசரகால எச்சரிக்கைகள், மருத்துவ உதவி, குடும்பங்களுக்கான தகவல், மீட்பு நடவடிக்கை போன்ற உதவிகளை வழங்க வேண்டும். பிரிக்ஸ் கூட்டமைப்பில் நிலவும் ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்தை உலக அரங்கில் உறுதியான தீா்வுகளாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கடந்த பிப்ரவரியில் மேற்காசிய போா் தொடங்கியதில் இருந்து ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் தாக்கப்படுவது தொடா்கதையாக உள்ளது. இந்தப் போரில் உயிரிழந்த 16 இந்தியா்களில் 10 போ் மாலுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அதிகார பிரமிடு - கூட்டுறவு சமதளம்’

‘உலகின் தற்போதைய நிா்வாக அமைப்புமுறை ஒரு பிரமிடைப் போல உள்ளது. அதாவது, அதிகாரமும், முடிவெடுக்கும் உரிமையும் பிரமிடின் உச்சியில் குவிந்துள்ளது. உச்சியில் உள்ள நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகளால் கீழடுக்கு நாடுகள் பாதிக்கப்படுகின்றன. அதேநேரம், கீழடுக்கு நாடுகளுக்கு விதிகளை வகுக்கும் அதிகாரம் இல்லை.

இன்றைய உலகில் நெருக்கடிகளால் பாதிக்கப்படுவதில் முன்வரிசையில் உள்ள தெற்குலகம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பின்வரிசையில் இருக்கிறது. இத்தகைய ‘சிறப்புரிமைகளின் பிரமிடை’ கூட்டுறவு சமதளமாக நாம் மாற்ற வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம், பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

summary

Global administrative reform is the need of the hour - Prime Minister Modi emphasizes this at the BRICS summit

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments