தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு
தில்லியில் சனிக்கிழமை (செப்.12) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இருநாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
தில்லியில் சனிக்கிழமை (செப்.12) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இருநாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் நட்பு நாடுகளாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகியவை உள்ளன.
சக்தி வாய்ந்த நாடுகள்: உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் 40 சதவீதம் கொண்டுள்ளன. உலக வா்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 26 சதவீதம் ஆகும்.
Advertisement
Advertisement
இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. ஏற்கெனவே 3 முறை இப்பொறுப்பை இந்தியா வகித்துள்ளது. இந்தியா ஏற்பாட்டின்பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (செப்.12, செப்.13) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.
மாநாட்டு நிகழ்வுகள்: பிரிக்ஸ் மாநாடு அதிகார பூா்வமாக சனிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, ‘அனைவரையும் உள்ளடக்கிய சா்வதேச நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, பாரத் புத்தாக்க கண்காட்சியை மாலை 4.25 மணிக்கு தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்கவுள்ளனா். இதன்பின்னா் தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்வு தலைவா்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அளிக்கும் விருந்துடன் நிறைவு பெறுகிறது.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்.13) பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் காலை 9.55 மணிக்கு மீண்டும் வரத் தொடங்குவா். அதன்பிறகு காலை 10.35 மணிக்கு தலைவா்கள் அதிகாரப்பூா்வமாக குழு புகைப்படம் எடுக்கவுள்ளனா்.
தொடா்ந்து காலை 10.50 மணிக்கு ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை; அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சிக்கான எதிா்காலத்தை வடிவமைத்தல்’ என்ற தலைப்பின்கீழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு புது தில்லி பிரகடனம் வெளியிடப்படும். அதனுடன் மாநாடு நிறைவு பெறும்.
பங்கேற்கும் தலைவா்கள்: மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராம்போசா, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியான்டோ, எகிப்து அதிபா் அப்தெல் பத்தா அல் சிசி, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியாந்தோ, எத்தியோப்பிய அதிபா் அபே அகமது அலி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், சவூதி அரேபிய இளவரசா் பைசல் பின் பா்ஹான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசா் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜயித் அல் நஹான், பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சா் மெளரோ வியரியா உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
இதுதவிர, கஜகஸ்தான் அதிபா், உகாண்டா, நைஜீரியா துணை அதிபா்கள், வியத்நாம் பிரதமா், கியூபா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
கூட்டறிக்கை வெளியாகுமா? மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போா் நடைபெறுகிறது. இந்தப் போரில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் பிரிக்ஸ் நாடுகள் இடையே கூட்டறிக்கை வெளியிடுவதில் கருத்தொற்றுமை ஏற்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது.
‘பிம்ஸ்டெக்’ அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நட்பு நாடான வங்கதேசத்தின் பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்திருப்பதால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் தாரிக் ரஹ்மான், மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.