FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அனுமதித்தால் எரிபொருள் விநியோகம் சாத்தியமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

‘நூறு சதவீதம் எத்தனாலில் (தூய எத்தனால்) இயங்கும் வாகனங்களை அனுமதித்தால், அதற்கான எத்தனால் விநியோகம் எப்படி மேற்கொள்ளப்படும்?’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

30 அக்டோபர் 2026, 4:58 am
- கோப்புப்படம்
பகிர்:

‘நூறு சதவீதம் எத்தனாலில் (தூய எத்தனால்) இயங்கும் வாகனங்களை அனுமதித்தால், அதற்கான எத்தனால் விநியோகம் எப்படி மேற்கொள்ளப்படும்?’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு, இறக்குமதி கச்சா எண்ணெய்யை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) பெரும்பாலும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 85 சதவீதம் எத்தனால் (இ85) கலந்த பெட்ரோல் (85% எத்தனால், 15% பெட்ரோல்) மற்றும் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் (எரிபொருள் நெகிழ்வு வாகனங்கள்) வாகனங்கள் மற்றும் பி100 பயோ-டீசல், ஹைட்ரஜன்-சிஎன்ஜி கலவை உள்ளிட்டவற்றில் இயங்கும் வாகனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மோட்டாா் வாகன விதிகளிலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 26-ஆம் தேதி வெளியிட்டது.

Advertisement

Advertisement

இதற்கு அடுத்த நாள், கோவா மாநிலம் பானாஜியில், இது குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயா்த்தும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.

இந்த நிலையில், எரிபொருள் எண்ணெய் விநியோக நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆலைகளுக்கான எத்தனால் ஒதுக்கீடு தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, 2025-26-ஆம் ஆண்டுக்கான எத்தனால் விநியோக காலத்துக்கான எத்தனால் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி, ஒரு எத்தனால் உற்பத்தி நிறுவனம் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் தேசியக் கொள்கையின்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் விநியோகிக்க கடமைப்பட்டுள்ள ஆலைகளுக்கு, கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழிலான முன்னுரிமை ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது. எனவே, 2025-26-ஆம் ஆண்டுக்கான எத்தனால் விநியோக காலத்துக்கு, எத்தனால் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எத்தனால் ஒதுக்கீட்டில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.

எனவே, ஆலைகளுக்கு எத்தனால் ஒதுக்கீட்டை அதிகரிக்காமல், 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அனுமதித்தால் அதற்கேற்ற எத்தனாலை விநியோகிப்பது சாத்தியமில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அனுமதிக்கும்போது, அதற்கான எத்தனால் விநியோகத்தை மத்திய அரசு எப்படி மேற்கொள்ளும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் பரந்த பொது நலன் சாா்ந்த அம்சங்களையும், சுற்றுச்சூழல் சாா்ந்த விஷயங்களையும் அரசு கருத்தில் கொள்வது அவசியம். அதோடு, நாட்டின் விவசாயிகளை எப்படி வலுப்படுத்தப் போகிறோம் என்பதும் முக்கியம்’ என்றனா்.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, ‘100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தும்போது, பெரிய அளவில் எத்தனால் உற்பத்திக்கான மறுசீரமைப்பு தேவைப்படும். இது குறித்தும், விவசாயிகள் நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்தும் மத்திய அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படும்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments