செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!
தில்லி பேரணியைத் திரும்பப் பெறுவதாக சிஜேபி அறிவித்திருப்பது பற்றி...
தில்லியில் செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவிருந்த பேரணியைத் திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் ஜந்தர் - மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தைக் கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை தில்லி காவல்துறை ரத்து செய்யாததைக் கண்டித்து, இந்தியா கேட் முதல் தில்லி காவல் ஆணையர் அலுவலகம் வரை செப். 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்தப் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவசர உத்தரவை பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
இதனிடையே, தில்லி போராட்டம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்வதாக திங்கள்கிழமை மாலை தெரிவித்தது.
இந்த நிலையில், இன்றைய விசாரணைக்கு நேரில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த உறுதிமொழி மற்றும் இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கவிருக்கும் உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, செப். 5 பேரணியை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
CJP calls off the September 5 Delhi rally!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.