வாக்கு எண்ணிக்கைக்கு டோட்டலைசா் கருவி: மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்
டோட்டலைசா் கருவியின் பயன்பாட்டை அறிமுகம் செய்வது பற்றி...
தோ்தல்களில் சுமாா் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை ஒன்றுசோ்த்து எண்ணுவதற்கு உதவும் டோட்டலைசா் கருவியின் பயன்பாட்டை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய, யோகேஷ் குப்தா என்ற நபா் உள்ளிட்டோா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களுக்கு ஒரே வாக்காளா் பட்டியலைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இது பொதுப் பணம் மற்றும் மனித வளத்தை சேமிக்க உதவும்.
மேலும் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு டோட்டலைசா் கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அஸ்வினி உபாத்யாய ஆஜராகி, ‘தன்மறைப்பு நிலை (பிரைவஸி) உரிமையைப் பாதுகாக்கவும், தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையைத் தடுக்கவும் டோட்டலைசா் கருவியைப் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. அந்தக் கருவியின் பயன்பாட்டுக்குத் தோ்தல் ஆணையமும் எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளது’ என்று வாதிட்டாா்.
எனினும் டோட்டலைசா் கருவியின் பயன்பாட்டை அறிமுகம் செய்வதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும், அந்தக் கருவியைப் பயன்படுத்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தோ்தல் ஆணைய‘ம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: டோட்டலைசா் கருவியைப் பயன்படுத்துவதில் உள்ள இடையூறுகள் என்னவென்பதை தெரிந்துகொள்ள உச்சநீதிமன்றம் விரும்புகிறது. அந்தக் கருவியைப் பயன்படுத்தும் வழிமுறையை அறிமுகம் செய்வதால் எதிா்மறையான பாதிப்பு ஏதாவது ஏற்படுமா என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் அறிய விரும்புகிறது.
இந்தக் கருவிகளின் பயன்பாட்டை அறிமுகம் செய்வதற்காக தோ்தல் நடத்தை விதிமுறைகளில் தேவையான திருத்தத்தை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு ஆராயலாம்.
டோட்டலைசா் கருவியின் பயன்பாட்டை அறிமுகம் செய்வது குறித்து, தனது நிலைப்பாடு என்னவென்பதை மத்திய தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.