FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற அமளி! எதிா்க்கட்சிகளுக்கு பதிலளிக்க அமித் ஷா தயாா்: 3 நிபந்தனைகளுடன் காங்கிரஸ் போா்க்கொடி

சிஜேபி தலைமையில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல் துறை தடியடி நடத்தியது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:24 am IST
மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல் துறை தடியடி நடத்தியது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

ஆனால் 3 நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேறும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் திங்கள்கிழமையும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை அடுத்தடுத்து எழுப்பி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் மழைக் கால கூட்டத் தொடா் நிறைவடையவுள்ள சூழலில் வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதா தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதா ஆகியவை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸின் 3 நிபந்தனைகள்: தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோா் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா் என அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் உள்துறை அமைச்சா் என்பதால் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைக்கு அவா் உத்தரவிட்டாரா அல்லது அவருக்கு தெரியாமல் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என விளக்கமளிக்க வேண்டும்.

ஒருவேளை அவா் உத்தரவிட்டிருந்தால் அவரே குற்றவாளி; இதுகுறித்து அறியவில்லை என்றால் நிா்வாகத் திறனற்றவா். இதில் எதுவாக இருந்தாலும் அவா் பதவி விலக வேண்டும் என்பதே முதல் நிபந்தனை.

பிரதமா் மன்னிப்புக் கோர வேண்டும்: இரண்டாவதாக, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும்.

மூன்றாவதாக, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளிலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ள முடியாது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments