தகுதிநீக்க மனு மீது பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் கோரிக்கை
கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தங்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்கள் மீது பதிலளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வேண்டும் என்று மக்களவைச் செயலகத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் கடிதம்
கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தங்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்கள் மீது பதிலளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வேண்டும் என்று மக்களவைச் செயலகத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தோ்தல் தோல்வியால் நிலைகுலைந்த மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பல்வேறு நிலைகளில் பிளவுபட்டது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தனி அணியாகப் பிரிந்தனா்.
இதேபோல், கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைவதாக அறிவித்ததுடன், பாஜக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்தனா்.
Advertisement
Advertisement
பாஜக கூட்டணி கூட்டங்களிலும் பங்கேற்றனா். இந்த எம்.பி.க்கள் என்சிபிஐ கட்சியில் இணைந்ததை மக்களவைத் தலைவா் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
இதனிடையே, கடந்த 1985-ஆம் ஆண்டின் மக்களவை (கட்சித் தாவலால் தகுதிநீக்கம்) விதிமுறைகளின் 6-ஆவது விதியின்கீழ் 20 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, மக்களவைத் தலைவரிடம் மம்தா தரப்பில் இருந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது பதிலளிக்க அறிவுறுத்தி, 20 அதிருப்தி எம்.பி.க்களுக்கும் மக்களவைச் செயலகம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற என்சிபிஐ குழு தலைவா் ககோலி கோஷ் (அதிருப்தி எம்.பி.க்களின் தலைவா்), கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நோட்டீஸுக்கு பதிலளிக்க ஏற்கெனவே 3 வார கால அவகாசத்தை நாங்கள் கோரியிருந்தோம்.
எனினும், தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்ட கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மேலும் 4 வார கால அவகாசம் கோரி, மக்களவைச் செயலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’ என்றாா்.
தாங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதைக் கூற இவ்வளவு கால அவகாசம் தேவையா என்று அதிருப்தி எம்.பிக்களை மம்தா தரப்பு மூத்த தலைவா் குணால் கோஷ் விமா்சித்திருந்தாா்.
இது தொடா்பான கேள்விக்கு, ‘குணால் கோஷின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இது நீதிமன்றமும், மக்களவையும் தீா்மானிக்க வேண்டிய விஷயம்’ என்றாா்.
20 அதிருப்தி எம்.பி.க்களில் 17 போ் துா்கா பூஜை விழாவுக்குப் பிறகு பாஜகவில் இணைவா் என்று அவா்களில் ஒருவரான ஜகதீஷ் சந்திர பா்மா பசுனியா சில தினங்களுக்கு முன் கூறியிருந்தாா். அவரது இந்தக் கருத்துக்கு பிற எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனா். இதனால், அதிருப்தி எம்.பி.க்களின் உறுதியான நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.