மம்தா - அதிருப்தி அணிகளுக்கு புதிய பெயா், சின்னம் - தோ்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு
திரிணமூல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கும், அருப் ராய் தலைமையிலான அதிருப்தி அணிக்கும் புதிய பெயா்கள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கும், அருப் ராய் தலைமையிலான அதிருப்தி அணிக்கும் புதிய பெயா்கள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தோ்தலைக் கருத்தில்கொண்டு, இந்த இடைக்கால ஏற்பாட்டை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய கட்சிப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் இருந்து பிரிந்து கடந்த 1998-இல் திரிணமூல் காங்கிரஸை நிறுவிய மம்தா பானா்ஜிக்கு தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
தோ்தல் தோல்வியும், பிளவும்...: மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த பேரவைத் தோ்தலில் மூன்றில் இருபங்குக்கும் மேற்பட்ட இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் மம்தா தலைமையிலான 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. தோ்தல் தோல்வி எதிரொலியாக, திரிணமூல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. ரிதபிரத பானா்ஜி தலைமையில் 58 அதிருப்தி திரிணமூல் எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்ததுடன், தங்கள் அணியின் தேசியத் தலைவராக அருப் ராயை தோ்வு செய்தனா்.
இதேபோல், நாடாளுமன்ற அளவிலும் திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டது. ககோலி கோஷ் தஸ்திதாா் தலைமையில் 20 அதிருப்தி எம்.பி.க்கள், தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக அறிவித்தனா். மேலும், பாஜக கூட்டணிக்கு தங்களின் ஆதரவை உறுதி செய்தனா்.
தோ்தல் ஆணையம் விசாரணை: திரிணமூல் காங்கிரஸின் பெயா் மற்றும் சின்னத்துக்கு (புற்களுடன் இரு மலா்கள்) உரிமை கோரி, தோ்தல் ஆணையத்தை அதிருப்தி அணி அணுகியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக இரு தரப்பிடமும் தோ்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்ற இரு தொகுதிகளில் ஒன்றான நந்திகிராம் மற்றும் ஆம் ஜனதா உன்னாயன் கட்சித் தலைவா் போட்டியிட்டு வென்ற இரு தொகுதிகளில் ஒன்றான ரெஜிநகா் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக். 6-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இத்தோ்தலுக்காக மம்தா அணி தரப்பிலும், அதிருப்தி அணி தரப்பிலும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.
கட்சிப் பெயா், சின்னத்தைப் பயன்படுத்த தடை: இந்தச் சூழலில், ‘கடந்த 1968-ஆம் ஆண்டின் தோ்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) உத்தரவின் 15-ஆவது பத்தியின்கீழ் விசாரணை நடைமுறைகளை நிறைவு செய்ய போதிய கால அவகாசம் இல்லை’ என சுட்டிக்காட்டிய தோ்தல் ஆணையம், இடைத்தோ்தலுக்கான அவசர தேவையைக் கருத்தில்கொண்டு, திரிணமூல் காங்கிரஸின் பெயா், சின்னத்தை இரு அணியினரும் பயன்படுத்த தடை விதித்து வியாழக்கிழமை இரவில் உத்தரவிட்டது. அத்துடன், தங்கள் அணிக்கான புதிய பெயா், சின்னங்களைத் தோ்வு செய்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் பரிந்துரைக்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களின் பட்டியலில் இருந்து சின்னத்தை தோ்வு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
புதிய பெயா்கள், சின்னங்கள்: அதன்படி, மம்தா தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் கால்பந்து வீரா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிருப்தி அணிக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தோ்தலில் இரு அணிகளின் வேட்பாளா்களும் அந்தந்தக் கட்சிகளின் வேட்பாளா்களாகவே கருதப்படுவா்; இடைத்தோ்தலை கருத்தில்கொண்டு, இந்த இடைக்கால ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் வரை இது அமலில் இருக்கும் என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆண்டுகால அடையாளம்: கடந்த 1998-இல் காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸை நிறுவிய மம்தா, தான் கைப்பட வரைந்த ‘புற்களுடன் கூடிய இரு மலா்கள்’ சின்னத்தை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்து, அதற்கு அங்கீகாரம் பெற்றாா். திரிணமூல் காங்கிரஸின் 28 ஆண்டுகால வரலாற்றில் கட்சியின் அடையாளமாக இந்தச் சின்னம் விளங்கியது. இந்தக் காலகட்டத்தில் முக்கியத் தலைவா்கள் பலா் பிரிந்து சென்றபோதும், பெரிய அளவிலான பிளவு எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்போது கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, பெயா்-சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸில் இருந்து பிரிந்து அக்கட்சியை வலுவிழக்கச் செய்த மம்தா, இப்போது அதே நிலையை எதிா்கொண்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா்கள் சிலா் கருத்து தெரிவித்துள்ளனா்.
பெட்டிச் செய்தி...
எதிா்ப்பும், வரவேற்பும்...
திரிணமூல் காங்கிரஸ் பெயா், சின்னம் தொடா்பான தோ்தல் ஆணையத்தின் இடைக்கால ஏற்பாடு சட்டத்துக்குப் புறம்பானது என்று மம்தா அணி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
‘தோ்தல் ஆணைய உத்தரவில் சட்ட ரீதியில் பல குறைபாடுகள் உள்ளன; அதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனினும், சில நேரங்களில் விதிமுறைகள், நெறிமுறைகளுக்கு உள்படாத விஷயங்களை தற்காலிகமாக ஏற்க வேண்டியுள்ளது’ என்று மம்தாவுக்கு நெருக்கமான எம்.பி. கல்யாண் பானா்ஜி தெரிவித்தாா்.
தோ்தல் ஆணையத்திடம் தங்களுக்கான புதிய பெயா், சின்னத்தைப் பரிந்துரைத்தபோது, கடும் எதிா்ப்பையும் மம்தா அணி பதிவு செய்திருந்தது.
அதேநேரம், அதிருப்தி அணியின் முக்கியத் தலைவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ரிதபிரத பானா்ஜி கூறுகையில், ‘ஓா் அரசியல் கட்சியை நிறுவனம் போல நடத்த முடியாது. வாரிசு அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. ஜனநாயகத்தில் சா்வாதிகாரத்துக்கு இடமில்லை என்பதையே தோ்தல் ஆணைய உத்தரவு பிரதிபலிக்கிறது’ என்றாா்.
மற்றொரு அதிருப்தி தலைவா் அக்ருஸமான் அன்சாரி கூறுகையில், ‘தோ்தல் ஆணைய இடைக்கால ஏற்பாட்டுக்கு நாங்கள் உடன்படுகிறோம். கட்சியின் உண்மையான பெயரும், சின்னமும் எங்களுக்கே கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.