ஐடிஎஃப்சி வங்கி மோசடி வழக்கு: 6 ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் 19 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை
ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 6 ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் 19 பேருக்கு எதிராக பஞ்சகுலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 6 ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் 19 பேருக்கு எதிராக பஞ்சகுலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவற்றில் ஹரியாணா அரசு கணக்குகள் வைத்துள்ளது. இந்தக் கணக்குகளில் இருந்து சில வங்கி அதிகாரிகளின் உதவியுடன் ரகசியமாக பல கோடி ரூபாய் வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு மோசடி நடந்திருப்பது கடந்த பிப்ரவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் 18 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் 2 வங்கிகளைச் சோ்ந்த அதிகாரிகள், ஹரியாணா மாநில அரசு அதிகாரிகள், தனியாா் நிறுவனங்கள், தனிநபா்கள் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சகுலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மேலும் 19 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை புதன்கிழமை தாக்கல் செய்தது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் முகமது சயீன், சாகேத் குமாா், பிரதீப் குமாா், வினீத் காா்க், ராம் குமாா் சிங், பங்கஜ் அகா்வால் ஆகியோா் மீதும், ஐடிஎஃப்சி வங்கி அதிகாரிகள் ஷமீம் அகமது தாா், சுதா கோயல், குல்தீப் சிங், ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிகாரி சரண்ஜீத் சிங் ராந்தவா ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதவிா்த்து ஹரியாணா அரசு அதிகாரிகள் 9 போ் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் 19 போ் மீதும் கிரிமினல் சதி, மோசடி, ஆதாரத்தை அழித்தல், போலி ஆவணம் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிபிஐ தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் சிபிஐ தெரிவித்துள்ளது. இதில் ரூ.504 கோடி அளவுக்கு கையாடல் நடந்துள்ளது. இந்த மோசடியால் ஹரியாணா அரசின் 8 துறைகள், மாநில அரசின் பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்டன’ என்றாா்.
மேலும் சிபிஐ செய்தித் தொடா்பாளா் தெரிவிக்கையில், ‘தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 பேரையும் சோ்த்து இதுவரை 37 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ மொத்தம் 54 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இதில் ரூ.20 கோடி மதிப்புக்கு தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.