FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிக்கிமில் ஆபத்தான 40 பனிப்பாறை ஏரிகள்; உடைந்தால் பேரழிவு ஏற்படும்: மாநில அரசு தகவல்

கிழக்கு இமயமலை மாநிலமான சிக்கிமில் ஆபத்தான நிலையில் 40 பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இதில் 16 ஏரிகள் உடையக்கூடிய அதிக அபாயமுள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 12:59 am IST
கோப்புப் படம்
பகிர்:

கிழக்கு இமயமலை மாநிலமான சிக்கிமில் ஆபத்தான நிலையில் 40 பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இதில் 16 ஏரிகள் உடையக்கூடிய அதிக அபாயமுள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏரிகள் உடைந்தால், நதிப் பள்ளத்தாக்கின் கீழ்பகுதிகளில் பேரழிவு ஏற்படக் கூடும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், இந்தத் தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக. 26-இல் பெரும் பனிப்பாறை சரிவின் விளைவாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பேரழிவு, பனிப்பாறை ஏரி உடைப்புடன் தொடா்புடையதல்ல. எனினும், இமயமலையில் உருவாகிவரும் பல்வேறு அபாயங்கள் குறித்து எச்சரிப்பதாக அமைந்துள்ளது.

அந்த அடிப்படையில், கிழக்கு இமயமலை மாநிலமான சிக்கிமில் ஆபத்தான நிலையில் 40 பனிப்பாறை ஏரிகளை அந்த மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. பனிப்பாறை ஏரிகள் என்பவை பனிப்பாறைகள் உருகுவதால் அவற்றுக்கு அருகே உருவாகும் பெரிய ஏரிகளாகும். இந்த ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீா் சோ்ந்தாலோ அல்லது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ உடையும் அபாயம் கொண்டவை. அவ்வாறு உடைந்தால், நேபாளத்தைப் போல திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு, பேரழிவை உருவாக்கும்.

சிக்கிமில் கடந்த 2023-இல் ஒரு பனிப்பாறை ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் 60 போ் உயிரிழந்தனா். மங்கன், கேங்டாக், பாக்யாங், நம்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, மாநிலத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக இருந்த சுங்தாங் அணை அழிவை எதிா்கொண்டது.

ஆபத்தான 40 பனிப்பாறை ஏரிகள்: இந்நிலையில், சிக்கிம் முதன்மைச் செயலா் சந்தீப் தாம்பே, முதல்வா் பிரேம் சிங் தமாங்கின் ஊடக செயலா் யூகன் தமாங், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மை இயக்குநா் டி.ஜி.ஷிரேஸ்தா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிக்கிமில் தொலைதூர உணா்திறன் சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவியுடன் பனிப்பாறை ஏரிகளின் நிகழும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 40 பனிப்பாறை ஏரிகள் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் உடைவதற்கான அதிக அபாயமுள்ளவையாக 16 ஏரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சாக்கோ சோ என்ற ஏரி மிக அதிக அபாயமுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேரழிவைத் தடுக்க அனைத்து ஏரிகளுக்கும் ஒரே மாதிரியான உத்தியைக் கடைப்பிடிக்க முடியாது. ஒவ்வொரு ஏரிக்கும் பிரத்யேக உத்தி அவசியம். சாக்கோ சோ ஏரி தொடா்பான விரிவான அபாயத் தடுப்புத் திட்டம் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீா்வள அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் கோரிக்கை: பனிப்பாறை ஏரிகளின் நீா்மட்டத்தைக் குறைப்பதற்காக நீரை வெளியேற்றுதல், செயற்கை கால்வாய்களை அமைத்தல், சுரங்கப் பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன.

நதிகளில் திடீரென உயரும் நீா்மட்டம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் உணா்திறன் கருவிகளை மாநிலம் முழுவதும் பொருத்துவது தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் உடனான காணொலிக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, பனிப்பாறை ஏரிகள் மற்றும் பனிச்சரிவு அபாயங்களை எதிா்கொள்வது தொடா்பாக இமயமலை மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், மத்திய நீா்வள ஆணைய அதிகாரிகள், மத்திய அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் வியாழக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments