எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளைக் கண்டித்த கங்கனா ரணாவத்!
தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகளை கங்கனா ரணாவத் எம்பி கண்டித்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகளை கங்கனா ரணாவத் எம்பி கண்டித்தார்.
ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் எம்பியான கங்கனா ரணாவத், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் நிர்வாகத் தாமதங்கள் மற்றும் நிதியை முறையாகப் பயன்படுத்தாதது தொடர்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளைக் கண்டித்தார்.
வளர்ச்சிப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்ட ரூ. 11 கோடி நிதியில் கிட்டத்தட்ட பாதி நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிக்காட்டிய கங்கனா, திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேவையான அனுமதிகளைப் பெறுவது போன்றவற்றில் ஏற்படும் தாமதங்களால் பல திட்டங்கள் தாமதமடைவதாக கங்கனா குற்றம் சாட்டினார்.
அதேபோல, சில சமயங்களில் நிலம் கையகப்படுத்துவது மற்றும் அனுமதி பெறுவது போன்ற விஷயங்கள் இல்லாத நிலையிலும் நிதி எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
கங்கனா பேசுகையில், “வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 11 கோடி வரை விடுவிக்கப்பட்ட போதிலும், இரு ஆண்டுகள் கடந்தும் கூட அதில் கணிசமான நிதி பயன்படுத்தப்படவில்லை. மார்ச் - ஏப்ரல் மாதம் வரை கூட அப்பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மண்டி பகுதியில் மட்டும் ரூ. 5.5 கோடி நிதியில் சுமார் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், திட்டங்களை விரைந்து முடிப்பதாகத் தரும் வாக்குறுதிகள் மட்டும் போதாது என்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அனுமதி வழங்கப்பட்ட பணிகளை தொடங்கத் தவறிய நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
Kangana Ranaut reprimands officials to ensure proper utilization of MP constituency development funds!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.