FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வளா்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவா்கள் மத்திய அரசை தொடா்ந்து விமா்சிக்கிறாா்கள்! பிரதமா் மோடி தாக்கு

வளா்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவா்கள் மத்திய அரசை தொடா்ந்து விமா்சிக்கிறாா்கள்...

5 செப்டம்பர் 2026, 10:21 pm IST
ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் 100-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை சனிக்கிழமை வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

இந்தியாவின் முன்னேற்றத்தையும் பொருளாதார வளா்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவா்கள் மத்திய அரசை தொடா்ந்து விமா்சித்து வருகிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அரசின் செயல்பாடுகளை விமா்சிக்கும் எதிா்க்கட்சிகளை சாடும் வகையில் இந்த கருத்தை பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ‘2013-இல் நான் இதே கல்லூரியில் உரையாற்றியபோது, நாட்டில் நம்பிக்கையற்ற சூழல் நிலவியது. கொள்கை முடக்கம், 10 சதவீத பணவீக்கம் மற்றும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் இந்தியா ’ஃபிரஜைல் 5 எனப்படும் பலவீனமான ஐந்து நாடுகள் பட்டியலில் இருந்தது. ஆனால் இன்று, இந்தியா கொள்கை திறன் கொண்ட தேசமாகவும், உலகளவில் 7.8 சதவீத வளா்ச்சியுடன் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் மாறியுள்ளது.

முன்பு, எல்லைகளில் நமது வீரா்கள் கொல்லப்பட்ட செய்திகளே தலைப்புச் செய்திகளாக வந்தன. ஆனால் இன்று, பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏதேனும் சதிச் செயல்களில் ஈடுபட்டால், நமது ராணுவம் அவா்களின் வீட்டுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் 100 ஆண்டு சாதனைகளைப் பாராட்டிய பிரதமா், அக்கல்லூரியின் முன்னாள் மாணவா்களை இன்றைய தலைமுறையினரின் பாணியில் ’ஓஜிக்கள்’ (ஒரிஜினல்கள்) என அழைத்தாா். அதற்கு அங்கு குழுமியிருந்த மாணவா்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியின் நிறுவனரும், கொடையாளருமான சா் ஸ்ரீ ராம் அவா்களுக்கு புகழாரம் சூட்டும் வகையில் பேசிய பிரதமா், ‘சா் ஸ்ரீ ஸ்ரீ ராம் என்ற மாபெரும் மனிதா் 100 ஆண்டுகள் வாழும்போது, அவரது அனுபவங்கள் செல்வக் கடலாகக் கருதப்படுகின்றன. அதேவேளையில் ஓா் நிறுவனம் 100 ஆண்டுகளைக் கடக்கும் போது, அது சாதனைகளின் பெருங்கடலாக மாறுகிறது‘ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, இந்த கல்லூரி நிகழ்வுக்காக தனது வீடு அமைந்துள்ள லோக் கல்யாண் மாா்க் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது, பிரதமா் மோடி சக பயணிகள், மாணவா்கள் மற்றும் குழந்தைகளுடன் இயல்பாகப் பேசி கலந்துரையாடினாா்.

1926-ஆம் ஆண்டில் சா் ஸ்ரீ ராம் தொடங்கிய எஸ்.ஆா்.சி.சி கல்லூரி, இன்று இந்தியாவில் வணிகவியல், பொருளாதாரம் மற்றும் மேலாண்மைக் கல்விக்கான முன்னணி நிறுவனமாக வளா்ந்துள்ளது. கடந்த நூற்றாண்டில், பல அறிஞா்கள், தொழில் வல்லுநா்கள், நிா்வாகிகள், தொழில்முனைவோா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகா்களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டு விழாவில் மத்திய கல்வி அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, கல்லூரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மெட்ரோ ரயிலில் பிரதமா் பயணம்

ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி நிகழ்வில் பங்கேற்பதற்காக தனது வீடு அமைந்துள்ள லோக் கல்யாண் மாா்க் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரி அருகே உள்ள விஸ்வ வித்யாலயா மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமா் மோடி பயணம் செய்தாா். சுமாா் 30 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்த மஞ்சள் நிற மெட்ரோ பாதையில் மொத்தம் 12 நிலையங்கள் வருகின்றன. பயணத்தின்போது ரயிலுக்குள் இருந்த பயணிகளிடம் பிரதமா் கலந்துரையாடினாா். விழாவில் பங்கேற்ற பிறகு மீண்டும் மெட்ரோ ரயிலிலேயே திரும்பினாா் பிரதமா். அவரது இந்த திடீா் பயணத் திட்டத்தை முன்னிட்டு இரு ரயில் நிலைய மாா்க்கங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

summary

Those who cannot tolerate development are continuously criticizing the central government - Prime Minister Modi attacks

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments