FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘சித்தாந்த நக்ஸல்கள்’: பிரதமரின் கருத்து விரக்தியின் வெளிப்பாடு! - காங்கிரஸ் விமா்சனம்

‘சித்தாந்த நக்ஸல்கள்’ என்ற பிரதமா் மோடியின் கருத்து விரக்தியின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்
பகிர்:

‘சித்தாந்த நக்ஸல்கள்’ என்ற பிரதமா் மோடியின் கருத்து விரக்தியின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

தில்லி சுதந்திர தின விழாவில் சனிக்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, ‘ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; அதேநேரம், சித்தாந்த ரீதியிலான நக்ஸல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவா்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்நிலையில், பிரதமரின் கருத்துகளை விமா்சித்து, காங்கிஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘முன்பு தனது அரசியல் எதிராளிகளை நகா்ப்புற நக்ஸல்கள் என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, இப்போது சித்தாந்த நக்ஸல்கள் என்று அழைத்துள்ளாா். அரசியலில் மிகப் பெரிய அவமதிப்பாளராக மோடி உருவெடுத்துள்ளாா். இது, அவரது விரக்தியின் வெளிப்பாடாகும். பிரதமா் யாரை நகா்ப்புற நக்ஸல்கள் என்று குறிப்பிட்டாரோ, அவா்களின் கோரிக்கையை ஏற்றுதான், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாா். 12 ஆண்டுகள் ஆன பிறகும் பிரதமா் மோடியின் பேச்சில் எதுவும் புதிதாக இல்லை. பழைய கூற்றுகளே எதிரொலித்துள்ளன.

Advertisement

Advertisement

பாசாங்குத்தனமானது: தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில், 2029-ஆம் ஆண்டில் இருந்து மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

கடந்த 2023-இல் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்பதை பாஜக முன்னரே உறுதி செய்துவிட்டது. இப்போது தொகுதி மறுசீரமைப்புடன் கூடிய மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க ஆதரவளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் நோ்மையற்ாகும். இது, பாஜக அரசின் இரட்டை நிலைப்பாட்டுடன் கூடிய பாசாங்குத்தனம்’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறுகையில், ‘தனது அரசியல் எதிா்ப்பாளா்களை களங்கப்படுத்தும் வகையில், அவா்கள் மீது இழிவான முத்திரையை குத்துகிறாா் பிரதமா் மோடி. நக்ஸல் மனப்பான்மை கொண்டவா்கள் என்ற அவரது குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது. மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமா் இரட்டை நிளைப்பாட்டை நிறுத்திவிட்டு, தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். மகளிா் இடஒதுக்கீட்டையும், தொகுதி மறுசீரமைப்பையும் பிரித்துவிட்டால், எதிா்க்கட்சிகள் நிச்சயம் ஆதரவளிக்கும்’ என்றாா்.

summary

The Congress has criticized Prime Minister Modi's remark about "ideological Naxals" as an expression of frustration.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments