துயருற்ற தாயின் குரல்! பிரதமர் மோடிக்கு கேத்தனின் தாய் கடிதம்!
கேத்தன் அகர்வாலின் தாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது பற்றி...
புணேவில் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வாலின் தாய் ராக்கி அகர்வால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புணேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு சியா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில், சியா தனது காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேத்தனை மலைக்கோட்டையிலிருந்து தள்ளிவிட்டு கடந்த ஜூன் 12 அன்று கொலை செய்தார்.
இந்த வழக்கில், சியா, சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், விரைவான நீதிக் கேட்டு, கேத்தனின் தாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
“என் சொந்த மகனுக்காக நீதி கேட்டு உங்களுக்கு எழுத நேரிடும் என்று நான் ஒருபோதும் கற்பனைகூட செய்ததில்லை. ஒவ்வொரு தாயையும் போலவே, கேத்தனுக்கு ஒரு அழகான வாழ்க்கையை அமைத்து, திருமணம் செய்து பார்க்க வேண்டும் எனக் கனவு கண்டேன். ஆனால், அதற்கு பதிலாக என் குழந்தையின் இறுதிச் சடங்குகளை நான் செய்ய வேண்டியிருந்தது. ஒரு தாய்க்கு இதைவிட பெரிய வலி வேறொன்றும் இல்லை.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட என் மகனுடன், என் உலமே சென்றுவிட்டது. எங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவனை எனக்கு நினைவூட்டுகிறது. அவன் அறை, அவன் உடைகள், அவன் புகைப்படங்கள், அவன் சிரிப்பிற்குப் பதிலாக வந்திருக்கும் அமைதி ஆகியவை அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான் என்பதை ஒவ்வொரு நாளும் எனக்கு நினைவூட்டுகின்றன.
கேத்தனை இழந்த வெறும் 20 நாள்களில் என் மாமனார் காலமானபோது, எங்கள் குடும்பம் இதயத்தை நொறுக்கும் மற்றொரு இழப்பைச் சந்தித்தது. அவர் கேத்தனை மிகவும் நேசித்தார். பேரனை இழந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை. சில நாள்களுக்குள், எங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளை இழந்தது.
மோடி அவர்களே, நான் ஒரு தாய் மட்டுமே. நான் அனுதாபத்தையோ அல்லது எந்தவொரு சிறப்புச் சலுகையையோ கேட்கவில்லை. நான் கேட்பது நீதியை மட்டுமே.
நீதி கிடைக்காத ஒவ்வொரு நாளும் எங்கள் வலியை ஆழமாக்குகிறது. கேத்தன் திரும்பி வர முடியாது, ஆனால் அவனது உயிரைப் பறித்தவர்கள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும். என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்.
தயவுசெய்து என் மகனின் வழக்குக்கு உரிய கவனம் கிடைப்பதையும், தேவையற்ற தாமதமின்றி நீதி வழங்கப்படுவதையும் உறுதிசெய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து என் மகனின் வழக்கை மற்றுமொரு கோப்பாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள். ஒவ்வொரு இரவும் அவனின் புகைப்படத்தைப் பார்த்து, "மகனே, அம்மா இன்னும் உனக்காகப் போராடுகிறாள்" என்று சொல்வேன். ஒருநாள் அவனிடம், "மகனே... உனக்கு நீதி கிடைத்துவிட்டது" என்று சொல்ல வேண்டும் என மட்டுமே நான் பிரார்த்திக்கிறேன்.
துயருற்ற ஒரு தாயின் குரலை நீங்கள் கேட்பீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக கேத்தனின் தந்தை விஷ்ணு அகர்வால், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
The voice of a grieving mother! Ketan's mother writes to Prime Minister Modi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.