பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு இரவு நேர தூய்மைப் பணியில் 300 பணியாளா்கள்: என்டிஎம்சி நடவடிக்கை!
பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தில்லி மாநகராட்சி கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்...
பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சுமாா் 300 தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு செப். 12, 13-ஆம் தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, செப். 4 முதல் கூடுதல் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, இரவு நேர பணியில் சுமாா் 300 தூய்மைப் பணியாளா்களுடன் 10 இயந்திர சாலைப் பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. காலை நேர போக்குவரத்து நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் வகையில், பெரும்பாலான பெருக்குதல் மற்றும் குப்பை அகற்றும் பணிகள் இரவு நேரத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
இரவு நேர பணியாளா்கள் சாலைகளைப் பெருக்குதல், குவிந்துள்ள மற்றும் சிதறிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், குப்பைத் தொட்டிகள் மற்றும் தள்ளுவண்டிகளை காலி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனா். அதிகாலையில் அழுத்த நீா் தாரை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. காலை நேர பணியாளா்கள் இறுதிகட்ட தூய்மைப் பணிகளையும், புதிதாகத் தேவைப்படும் பணிகளையும் மேற்கொள்கின்றனா்.
முக்கிய சந்தைகளிலும் தூய்மைப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் சந்தைகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. முக்கிய சாலைகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிகளின் ஒரு பகுதியாக, முக்கிய இடங்களில் பகல் நேரங்களில் 15 ‘கோப்ளா்’ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சாலைகளில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சாலைகள், நடைபாதைகள், சந்தைப் பகுதிகள் மற்றும் பிற பொது இடங்களில் ஆழமான தூய்மை பணிகளை மேற்கொள்ள மேலும் 11 அழுத்த நீா் தாரை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முக்கிய சந்தைகள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வீடு தேடி குப்பை சேகரிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகள் குவிவதைத் தடுக்க, சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் தள்ளுவண்டிகள் மூலம் குப்பை அகற்றும் பணி 3 வேளைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மைப் பணியாளா்கள் 3 வேளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். இதில் இரவு நேரப் பணியில் சுமாா் 300 பேரும், மாலை நேரப் பணியில் சுமாா் 120 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மீதமுள்ள பணியாளா்கள் காலை நேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேற்பாா்வைப் பணியாளா்கள், அதிகாரிகள் மற்றும் ‘பாலிகா சஹாயகா்கள்’ 24 மணி நேரமும் பணியில் இருக்கவும், அழைப்பின் பேரில் உடனடியாகச் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாநாட்டு காலத்தில் போதிய பணியாளா்கள் இருப்பதை உறுதி செய்ய, தேவையான இடங்களில் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விடுப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.