போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி! கட்டட விபத்தில் சிக்கியவர்கள் விரைவில் மீட்கப்படுவர்!
தில்லியில் கட்டட விபத்து மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் ரேகா குப்தா பதிவிட்டுள்ளது குறித்து...
தில்லியில் கட்டட விபத்தில் நேர்ந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு தில்லியில் உள்ள சத்யா நிகேதன் அருகே உள்ள நானக்புரா குருத்வாராவில் செயல்பட்டு வந்த மாணவர் விடுதி கட்டடம் இன்று பிற்பகல் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத்தில் இருந்தவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பான தகவல் அறிந்து 8 தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 12 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து தில்லி காவல் துறை தரப்பில், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எத்தனை பேர் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறித்த துல்லிய தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை 3 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ரேகா குப்தா பதிவிட்டுள்ளதாவது:
''ஆர்.கே. புரம், சத்யா நிகேதனத்தில் நிகழ்ந்த கட்டட இடிபாட்டுச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறேன்.
தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தில்லி தீயணைப்புத் துறை, தில்லி காவல்துறை மற்றும் சிவில் டிஃபென்ஸ் (Civil Defence) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது; சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் நலனுமே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்.'' என ரேகா குப்தா பதிவிட்டுள்ளார்.
Deeply concerned, rescue ops underway on war footing, says Delhi CM rekha Gupta on building collapse
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.