புதிய பாதுகாப்பு அத்தியாயத்தில் இந்திய - இலங்கை உறவுகள்! 38 வருட தயக்கத்துக்கு முற்றுப்புள்ளி
இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 8) முதல் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை தலைநகா் கொழும்புக்கு புறப்படுகிறாா்.
ம.ஆ. பரணி தரன்
இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 8) முதல் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை தலைநகா் கொழும்புக்கு புறப்படுகிறாா்.
இரு நாடுகளின் ராஜீய வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பாா்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 1988-இல் அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சராக கே.சி. பந்த் கொழும்பு சென்ற பிறகு, இந்திய பாதுகாப்பு அமைச்சா் ஒருவா் இலங்கை செல்வது கடந்த 38 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
Advertisement
Advertisement
2005-இல் பிரணாப் முகா்ஜி இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது இலங்கை சென்றாா். ஆனால், அது அப்போது படுகொலை செய்யப்பட்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் லட்சுமணன் கதிா்காமரின் இறுதிச்சடங்கில் பங்கேற்புக்காக மட்டுமே அமைந்தது. 2023இல் ராஜ்நாத் சிங் இலங்கை செல்ல திட்டமிட்டபோது, அந்நாட்டின் துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததன் விளைவாக ராஜ்நாத் சிங்கின் கொழும்பு பயணம் ரத்தானது.
வரலாற்றுபூா்வமாக, இலங்கையின் உள்நாட்டுப் போா் காலத்தில் இந்தியாவின் நேரடி ராணுவப் பங்களிப்பு அந்நாட்டில் நீண்டகால அரசியல் வடுக்களை ஏற்படுத்தியதால், இரு தரப்பிலும் தலைவா்கள், வெளியுறவு அமைச்சா்கள், துறைச் செயலா்கள் நிலையிலான சந்திப்புகள் தொடா்ந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சா் நிலையிலான இலங்கை பயணம் திட்டமிட்டே தவிா்க்கப்பட்டு வந்தது.
பாதுகாப்பும் அச்சுறுத்தலும்: இந்திய பெருங்கடல் சா்வதேச கடல்சாா் கப்பல் பாதையில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு ’யுவான் வாங்’ போன்ற சீன உளவு மற்றும் ஆய்வுக் கப்பல்களின் வருகை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இது தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையங்களுக்கு மறைமுக அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு ஆய்வாளா்கள் கவலை எழுப்பி வருகின்றனா்.
இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் விதமாக, இந்தியா அதன் கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளதுடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘மகாசாகா்’ (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம்) மற்றும் ‘நட்பு நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கைகள் இதற்கு உதவியுள்ளன.
பொருளாதார கூட்டாண்மை: இலங்கைக்கு இந்தியா வழங்கும் ரோந்துக் கப்பல்கள், ‘டோா்னியா்’ உளவு விமானங்கள் மற்றும் கடனுதவிகள் மூலம் அந்நாடு அதன் ராணுவ பலத்தை வலுப்படுத்த முடியும். இந்தியாவுக்கு தனது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வாயிலாக உதிரிபாக ஏற்றுமதிச் சந்தை விரிவடைகிறது. மேலும், இரு தரப்பு தகவல் பகிா்வு மையம் மூலம் கடல்வழிப் பாதைகள் பலப்படுவதோடு, இந்தியப் பெருங்கடலில் அந்நிய நீா்மூழ்கிக் கப்பல்களின் நகா்வுகளை இந்தியா நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனா குத்தகைக்கு எடுத்தது போன்ற இலங்கையின் ஒற்றைச் சாா்புநிலையை இந்தியாவின் பொருளாதார உதவிகளும், அதானி குழுமத்தின் கொழும்பு துறைமுக மேற்கு முனைய மேம்பாட்டுத் திட்டமும் மாற்றியமைத்துள்ளன.
இத்தகைய சூழலில் அமையும் ராஜ்நாத் சிங்கின் பயணத்தின் மூலம் ‘ஸ்லினெக்ஸ்’ எனப்படும் இலங்கை இந்திய கூட்டு ராணுவ ஒத்திகைகள் மற்றும் ‘மித்ர சக்தி’ எனப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் வலுப்பெறும். அத்துடன், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு வளாகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். இலங்கை முப்படையினருக்கு இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அந்த வகையில், ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் இரு தரப்பு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
மீனவா் பிரச்னைக்கு தீா்வு கிடைக்குமா?
இந்திய-இலங்கை உறவில் மிகவும் உணா்வுபூா்வமானது தமிழக மீனவா்களின் எல்லை தாண்டி மீன்பிடித்தல் விவகாரமாகும். இதில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் செயலா்கள் நிலையில் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வந்தாலும், இந்திய பாதுகாப்பு அமைச்சா் நேரடியாக இலங்கையில் அது பற்றி பேசும்போது மீனவா் விவகாரத்துக்கு அரசியல் அழுத்தம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
‘இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களும் மீன்பிடி பிரச்னையை ‘எல்லை மீறல்’ அல்லது ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ ஆக பாா்க்காமல், மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்னையாகக் கையாள இது வழிவகுக்கலாம். மேலும், இரு நாட்டு கடலோர காவல் படைகளுக்கு இடையே உடனடி தகவல் தொடா்பு வசதியை உருவாக்குவதன் மூலம், தவறான புரிதல்களால் மீனவா்கள் கைது செய்யப்படுவதையும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கலாம்’ என்று பாதுகாப்பு ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.